தமிழகத்தின் மஹாத்மா வ.உ சிதம்பரம் பிள்ளை

சுதேசி கொள்கையை உயிர் மூச்சாக கருதினார் வ.உ.சி என்பதை நாம் அறிவோம்.   பல்வேறு தொழில்கள் இருக்க, சுதேசி கப்பல் இயக்க அவர் முடிவெடுத்த காரணம் என்ன ?  அது இயல்பாக எழுந்ததா அல்லது மண்ணின் பெருமையா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

நாம் சுமார் 2200 வருடம் ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தால்,  முத்து நகரத்தில்  (இன்றைய தூத்துக்குடி)  உள்ள கொற்கை துறைமுகத்திற்கு ஏராளமான நாவாய்கள் வந்து போவதையும், மக்கள் கடல் கடந்து வந்து முத்துக்களை வாங்கி செல்வதையும் காண முடியும். அவ்வளவு செழிப்பான ராஜ்யமாக விளங்கியது. அகநானூறு, கலித்தொகையில் கொற்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் பிறப்பிடம் இந்த கொற்கை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  காலப்போக்கில் இந்த துறைமுகம் அதன் பொலிவை இழந்தது.

அங்கிருந்து சற்று முன்னோக்கி பயணித்தால், காஞ்சிபுரத்தில் உள்ள மாமல்லபுரம் துறைமுகத்தை நாம் காணலாம். சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தோம். வர்த்தகம் மட்டுமல்லாது கலாச்சார ரீதியான தொடர்புகளுக்கும் இந்த துறைமுகம் வித்திட்டது.

அப்படியே கால சக்கரத்தை 11ம் நூற்றாண்டிற்கு  ஓட்டி வந்தால், பாரத நாட்டின் ஒப்பற்ற வீரன் ராஜேந்திர சோழன், கடல் கடந்து கடாரம் (மலேசியா) வரை சோழர் கொடியை நாட்டுவதை காணலாம். தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை, பர்மா (மியான்மர்) என்று அனைத்து திசைகளிலும் வெற்றிக் கொடியை பறக்க விட்டார். இந்து மகா சமுத்திரம் நமது ஆளுமையின் கீழ் இருப்பதையும்,  கடல் தாண்டிய வணிகத்தில் முன்னணியில் இருப்பதையும் உணர முடியும்.

நமது கலாச்சாரம் பற்றி அறியவும், கல்வி கற்கவும், ஞானம் பெறவும், வேளாண் பொருட்கள், அணிகலன்கள், ஆடைகள் வாங்கவும் எண்ணற்ற வெளிநாட்டவர்கள் இங்கு வந்து சென்றார்கள்.  நமது வணிகர்களும்  கடல் கடந்து சென்று, பொருட்களை விற்று வந்தார்கள். ஒரு காலகட்டத்தில் உலகத்தின் மொத்த உற்பத்தியில் 3ல் ஒரு பங்கு பாரதத்தில் நடைபெற்று வந்தது.  இப்படிப்பட்ட ஒரு வளமான, வலிமையான தேசமாக பாரதம் விளங்கிய அற்புத காட்சியை நாம் காணலாம்.

அழகுடன் ஆபத்தும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த அழகும், செழிப்பும் தான் அன்னியர்களை இங்கு வரவழைத்தது. 15ம் நூற்றாண்டின் இறுதியில் கடல் மார்க்கமாக போர்த்துகீசியர் வாஸகோ டா காமா வந்தார். மலபாரை கைப்பற்றினார்கள்.

அடுத்த சில ஆண்டுகளில் வியாபாரம் செய்கிறேன் என்று சொல்லி உள்ளே வந்த டச்சு, பிரெஞ்சு, பிரிட்டிஷ் நாட்டவர்கள் நமது நாட்டையே ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.  கடல் பகுதியும் அவர்களுக்கு சொந்தமாகி விட்டது.  கப்பல் போக்குவரத்து பிரிட்டிஷார் வசமே இருந்தது. இதனால் நமது உள்நாட்டு பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது சிக்கலாகி போனது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலக வர்த்தகத்தில் பாரதத்தின் பங்கு, ஒற்றை இலக்கத்திற்கு சரிந்து விட்டது.

இழந்த பெருமைகளை மீட்க வேண்டும் என்றால், கடல் தாண்டிய வர்த்தகம் மீண்டும் பாரதியர்கள் வசம் வர வேண்டும் என்று வ.உ.சிதம்பரனார் உணர்ந்திருக்க வேண்டும்.

கடல் மார்க்கமாக இழந்த பெருமைகளை, அதே கடல் மார்க்கமாக மீட்பதே வ.உ.சிதம்பரத்திற்கு எண்ணமாக ஏற்பட்டிருக்க வேண்டும்.  சுதேசி கப்பல் என்பது வியாபார விஸ்தீரணம் மட்டும் அல்ல, அது நமது நாட்டின் அடையாளத்தை மீட்பதுமாக இருக்கும் என்பதை அவர் எண்ணியிருக்க வேண்டும். அதனால் தான் அவர் கப்பல் சுதேசி கப்பல் இயக்க தீர்மானித்திருக்க வேண்டும் .

இன்று தன்னிறைவு பாரதம் திட்டம் நம் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 120 ஆண்டுகளுக்கு முன்னரே இதை முன்னெடுத்தவர் வ.உ.சி. அவர் ஒவ்வொரு செயலிலும் தனது சுதேசி கொள்கைகளை கடை
பிடித்தார்.  சுதேசி பொருட்களை மட்டுமே பயன்படுத்தினார்.  பல்லாயிரக்கணக்கானோர் இவரால் ஈர்க்கப்பட்டு சுதேசி போராட்டத்தில் ஈடுபட்டனர், விடுதலை வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஒரு கட்டம் வரை  இவரது வாழ்க்கையும், மஹாத்மா காந்தியின் வாழ்க்கையும் ஒரே மாதிரி பயணித்தது. இருவரும் சம காலத்தில் பிறந்தவர்கள், வழக்கறிஞராக பணிகளை துவக்கியவர்கள், வ.உ.சி இங்குள்ள தொழிலாளர்களுக்காக போராடினார், காந்தி தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்திய தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். இரு தலைவர்களுமே ஆன்மீகத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்கள்.  இருவருமே பிரிட்டிஷ் அடக்குமுறைகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சுதேசி கொள்கையிலும் தீவிரமாக இருந்தார்கள்.

வரலாறு சொல்லும் உண்மை என்னவென்றால் சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. காந்தியை விட முன்னோடி. தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியாவிற்கு திரும்பியது 1915ல், ஆனால் அதற்குள் வாழ்க்கையில் பல நிலைகளை கடந்து விட்டிருந்தார் வ.உ.சி.அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர்,  சில காலம் காங்கிரஸில் இருந்தாலும், முன்னரே குறிப்பிட்டது போல முழு நேர அரசியலில் இருந்து விலகி நின்றார். அதற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன.  தன்னை யாரும் கொண்டாட வேண்டாம் என அவரே நினைத்தாரோ அல்லது காலம் அவரை கண்டுகொள்ளாமல் விட்டதோ தெரியவில்லை, தேசமே கொண்டாடியிருக்க வேண்டிய ஒரு தலைவரான, வ.உ.சிதம்பரனார், தனது இறுதி காலத்தில், புகழ் வெளிச்சம் படராமலேயே மறைந்து விட்டார்.

இவரை தமிழகத்தின் மஹாத்மா என்று அழைத்தாலும், அது சாலப் பொருந்தும்.    F F