தமிழக அரசின் வலிமை சிமென்ட் 15 லட்சம் டன்னுக்கு மேல் விற்பனை

தமிழக அரசின், ‘டான்செம்’ எனப்படும் சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு, விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உற்பத்தித் திறனிலும்; அரியலுார் மாவட்டத்தில் 5 லட்சம் டன் திறனிலும் சிமென்ட் ஆலைகள் உள்ளன. இதுதவிர, அரியலுாரில், 10 லட்சம் டன் திறனில் நவீன சிமென்ட் ஆலையும் உள்ளது.

டான்செம் நிறுவனம், வெளிச்சந்தையில் ‘அரசு’ என்ற பிராண்டில், தனியார் நிறுவனங்களின் விலையை விட சற்று குறைந்த விலைக்கு, சிமென்ட் விற்பனை செய்கிறது.

தமிழக மொத்த சிமென்ட் சந்தையில், டான்செம் பங்கு, 8 சதவீதம். சந்தை பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் அந்நிறுவனம், ‘வலிமை சிமென்ட்’ என்ற பெயரில், முதல்தர சிமென்ட் விற்பனையை, 2021 நவ., 16ல் துவக்கியது.

இந்த வலிமை சிமென்ட், குறைந்த இறுகும் தன்மையுடன், ‘குளோரைடு சல்பேட்’ உள்ளிட்ட வேதி பொருட்களில் இருந்து அதிக பாதுகாப்பும் அளிக்கிறது. 50 கிலோ எடை உடைய ஒரு மூட்டை சிமென்ட் விலை, 350 ரூபாய். தற்போது வரை, 15.50 லட்சம் டன் வலிமை சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை, 1 லட்சம் அரசு சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, 325 ரூபாய்.