தனது குடும்பத்தையும் ஊரையும் சங்கமயமாக்கிய பானுகுமார் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, பானுகுமார் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் தெள்ளாறு கிராமத்தில், 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி, நல்லதம்பி – ஸ்ரீரங்கம்மாள் தம்பதியினருக்கு, ஆறாவது மகனாகப் பிறந்தார், பானுகுமார் ஜி.

பள்ளி வகுப்பை தெள்ளாறில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, போளூரில் 1972 ஆம் ஆண்டு, ஆசிரியர் பயிற்சி வகுப்பில், தேர்ச்சிப் பெற்றார். தனது ஊருக்கு அருகிலேயே பணியில் சேர்ந்தார். அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து, மாணவர்களிடையே தேசபக்தியை உருவாக்கினார். அஞ்சல்வழிக் கல்வியில் எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., படிப்பை முடித்தார்.
பள்ளிக்கல்வி முடித்ததும், தனது ஊரில் வீற்றிருந்த திருமூலட்டானேஸ்வரர் ஆலயத்தில், குருக்களாக இருந்த ஸ்ரீ ஹாலாஸ்யநாதரின் அறிவுறுத்தலின் பேரில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சிறுவர் – சிறுமியர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்திப் பாடல்களை திருவேங்கடம் ஆசிரியருடன் சேர்ந்து பயிற்சி கொடுத்து, சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசு வழங்கி வந்தார்.

அந்தக் கோயிலில் தரிசனம் செய்ய வந்த காலம் சென்ற வீரபாகு ஜி கோயில் குருக்களிடம் ஆர்.எஸ்.எஸ் பற்றி எடுத்துரைத்து, அந்த ஊரில் சங்கப் பணி செய்வதற்கு, இளைஞர்களை அறிமுகப்படுத்துமாறு வேண்டுகோள் வைத்தார். வீரபாகு ஜியின் வேண்டுகோளை ஏற்று, குருக்கள் பானுகுமார் ஜியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின்னர், கவுண்டப்பன் ஜி மற்றும் தனுசு ஜி, பானுகுமார் ஜியை சந்தித்து சென்றனர். வீரபாகு ஜி மூலம் சங்கத்திற்கு அறிமுகமாகி, 1974 ஆம் ஆண்டு கோவையில் முதலாம் ஆண்டு சங்கப் பண்புப் பயிற்சி முகாமை முடித்தார். முகாம் முடித்தவுடன், தனது ஊரில் ஷாகாவை தொடங்கினார். அந்த ஷாகாவிற்கு இராமகோபாலன் ஜி அவர்கள் த்வஜம் (பகவாக் கொடி) அளித்து சிறப்புரை ஆற்றினார்.

1975 ஆம் ஆண்டு, திருப்பராய்த்துறையில் இரண்டாம் ஆண்டு சங்கப் பண்புப் பயிற்சி முகாமை முடித்தார். மூன்றாம் ஆண்டு பயிற்சிக்கு நாக்பூர் செல்ல தயாரான போது, எதிர்பாராத விதமாக சங்கத்திற்கு தடை ஏற்பட்டு விட்டது. எனினும் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட, காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் அருளிய “ஹிந்து சமய மன்றம்” ஒன்றைத் தொடங்கி, ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இந்த அமைப்பிற்கு ஸ்ரீ ரமண பக்தரான சச்சிதானந்தம் அவர்கள் தலைமைப் பொறுப்பு வகித்தார். மக்களை ஒன்று திரட்டி, ஊருக்கு நடுவே பராமரிப்பு இன்றி கிடந்த விநாயகர் கோவிலை புனரமைக்க, நிதி திரட்டி திருப்பணி செய்து செப்பனிட்டார். குடமுழுக்கு விழா நடைபெற முக்கியக் காரணமாக விளங்கினார்.

காலப்போக்கில் சங்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, அனைத்து இடங்களிலும் சங்கம் வேரூன்றத் தொடங்கியது. பானுகுமார் ஜியும் தனது ஊரில் உள்ள பல முக்கியப் பிரமுகர்களை சந்தித்து, சங்கத்தில் இணைத்தார். அந்த ஊரில் உள்ள புகழ்பெற்ற சமூக நல ஆர்வலரான ராமநாதன் ஜிக்கு சங்கத்தை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர், ஜில்லா சங்கச்சாலக் பொறுப்பு ஏற்றார்.

ஊரில் பலரும் ப்ராத்தமிக், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு என சங்கத்தின் பண்புப் பயிற்சி முகாம்களை முடித்து, பலரும் கார்யகர்த்தர்கள் ஆயினர். இராமகோபாலன் ஜி சிறப்புரை ஆற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் சிறப்பாக நடந்தேறியது.
தெள்ளாறு பகுதியில் உள்ள ஸ்ரீ அபேதாநந்தா பாலிடெக்னிக் கல்லூரியில், 1992ல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு சங்கப் பண்பு பயிற்சி முகாம் நடந்தது, அது சிறப்பாக நடைபெற பேருதவியாக இருந்தார்.

1988ல் நடைபெற்ற டாக்டர் ஜியின் நூற்றாண்டு விழா மற்றும் 2006ல் நடைபெற்ற ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா போன்ற அனைத்து சங்க நிகழ்ச்சிகளும், தனது ஊரில் சிறப்பாக நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

ஷாகா முக்கிய சிக்ஷக் என்ற பொறுப்பில் தொடங்கி, காலப்போக்கில் திருவண்ணாமலை ஜில்லா பௌத்திக் ப்ரமுக், குடும்ப ப்ரபோதன் ப்ரமுக் என பல பொறுப்புகளில் இருந்து சங்கப் பணியை செய்து வந்தார். சிதம்பரம், மயிலம் பகுதியில் கல்வி அதிகாரியாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற பிறகு, தெள்ளாறில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். 2003ல், “மாநில நல்லாசிரியர் விருது” பெற்றார்.

தெள்ளாறில் இலவச டியூஷன் வகுப்பு நடத்தி, மாணவ – மாணவியர்களுக்கு நல்வழி காட்டினார். அவர்கள் மூலமாக அவரது பெற்றோர்கள் சங்கத்திற்கு அறிமுகமாகி, அவற்றில் பலரும் சங்கப் பண்புப் பயிற்சி முகாமை முடித்து, சங்க கார்யகர்த்தர்களாக மாறினர். “நல்லோர் வட்டம்” தொடங்கி, சங்க அதிகாரிகளை அதில் பேச வைத்து, அதன் மூலம் சமூகத்தினுடைய சங்க சிந்தனையை தோற்றுவித்தார்.

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, 100 பள்ளிகளுக்குச் சென்று, சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறி, அவரைப் பற்றிய புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற கரசேவையின் போது கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பானுகுமார் ஜி, 1985 ஆம் ஆண்டு, கீதா அம்மாளை திருமணம் செய்தார். அவருக்கு பிரகாஷ் என்கிற மகன் உள்ளார். அவரும் சங்கப் பண்புப் பயிற்சி முகாமை முடித்துள்ளார். மகள் பிருந்தா மருத்துவத்துறையில் அரசுப் பணியில் உள்ளார்.

தற்போது வயதாகி விட்ட போதிலும், ஊரில் நடைபெறும் சங்க விழாக்களுக்கும், பிற இடங்களில் நடைபெறும் சங்கத் தொடர்பான நிகழ்வுகளுக்கும் உதவியாக இருந்து, அனைவரையும் அன்போடும், பொறுமையோடும் அரவணைத்துச் செல்லும் பானுகுமார் ஜி, தனது குடும்பத்தையும், தனது ஊரையும் சங்கமயமாக்கி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.