ரயில் பயணம் ரயில் ஸ்நேகம் இரண்டுமே தற்காலிகமானது தான். ஆனால் பயணத்தில் ஏற்படும் சில நிகழ்வுகளின் தாக்கம் என்றென்றும் நம்முடனேயே பயணிக்கும். நல்லதோ கெட்டதோ, பல சமயங்களில் அவை மறக்க முடியாத அனுபவங்களாகப் நம் மனதில் பதிந்து விடும் .
* * *
நிவேதிதா ரகுநாத் பிடே, விவேகானந்த கேந்திரத்தின் அகில பாரத துணைத் தலைவர், சமூக செயற்பாட்டாளர். இவர் ஒரு கட்டுரையில் தனது ரயில் பயண அனுபவத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இரவு நேரம். ரயிலில் அனைவரும் உறங்கத் தயாராகும் போது ஒரு குழந்தை ஓயாமல் அழுகிறது. இளம் பெற்றோர் செய்வதறியாமல் பரிதவித்தனர்.
ரயில் பெட்டியிலிருந்தவர்கள் ஆளுக்கு ஒரு யோசனை சொல்ல, அனைத்தையும் முயன்று பார்த்தனர். ஒரு பலனுமில்லை. குழந்தை அழுதுகொண்டே இருந்தது.
பிறகு, அனுபவம் மிக்க ஒரு பாட்டி குழந்தையின் வயிற்றை தொட்டுப் பார்த்து வயிற்று வலி எனப் புரிந்துகொண்ட பாட்டி ,வயிற்றில் மென்மையாக எண்ணெய் மசாஜ் செய்ய, நொடியில் குழந்தையின் அழுகை மாயமானது!
விமானத்தில் ஒரு முறை இதே போன்ற நிலைமை ஏற்பட்டபோது குழந்தையின் அழுகையால் பயணிகள் மிகவும் எரிச்சலடைந்ததாகக் கூறுகிறார் நிவேதிதா.
* * *
பாட்டி வைத்தியம் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அகில உலக ஆயுர்வேத மாநாட்டின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசுகிறார்:
“ரயிலில் ஒரு குழந்தை அழுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். சுற்றியிருப்பவர்கள் பத்து பேர் பத்து வைத்தியம் / யோசனை கூறுவர். அவர்கள் மருத்துவர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர்கள் கூறும் கை வைத்தியத்தை நம்பிக்கையோடு முயற்சித்துப் பார்ப்போம். காரணம், இது போன்ற கை வைத்தியம் தொன்றுதொட்டு நம் பழக்கத்தில் பாரம்பரியத்தில் உள்ளது.
அத்தகைய பாரம்பரிய மருத்துவ முறையை நாம் மீட்டெடுக்க வேண்டும்”. மோடி கூறிய ரயில் பயணம் இது.
கட்டுரையாளர் ரயில்வே உயரதிகாரி. ரயில்வேயில் பயிற்சிக்காக அசாமிலிருந்து ஆமதாபாத் வந்த பெண். அசாம் – டெல்லி ரயிலில் சில அரசியல்வாதிகளின் எடுபிடிகளால் மிகுந்த தொந்தரவுக்குள்ளானதில் பயந்து போன இவரது தோழி ஆமதாபாத் பயிற்சியையே கைவிட்டாராம். இவரும் மற்றொரு தோழியும் மட்டும் கிளம்பினர். ரயிலில் கூட்ட நெருக்கடி. இடம் பதிவு செய்யப்படாததால் டிக்கெட் பரிசோதகர் இவர்களை ஒரு கூபேவுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கும் இரு அரசியல்வாதிகள்! முதல் நாள் அனுபவம் தந்த பயம், தயக்கம். இருவரில் ஒருவர் நடுத்தர வயது, மற்றவர் முப்பதுகளில். டி.டி.ஈ தந்த தைரியத்தில் பெண்கள் அமர்ந்துகொண்டனர் .
வரலாறு, அரசியல் என பல்வேறு விஷயங்களை மூத்த அரசியல்வாதியும் இந்த இரு பெண்களும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்க இளையவர் அமைதியாக ஆனால் கூர்ந்து கவனித்தார். பெண்களுக்கு உணவு வாங்கித் தந்தார். தங்கள் பெர்த்தை இவர்களுக்கு விட்டுத் தந்து அவர்களின் துணியை விரித்து தரையில் உறங்கினர்.
ஆமதாபாதில் இறங்கும் சமயம், தேவைப்பட்டால் தன் வீட்டிலேயே பெண்கள் தங்கலாம் என்று கூறினார் மூத்தவர் இளையவரோ, “எனக்கென்று வீடில்லை. நான் நாடோடி. நீங்கள் இவர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கலாம் ” என்றார் .
ரயிலிலிருந்து இறங்கும் போது இரு அரசியல்வாதிகள் பெயரை கேட்ட போது மூத்தவர் சங்கர் சிங் வகேலா; இளையவர் நரேந்திர மோடி! என தெரிகிறது.
“முதல் நாள் மோசமான அனுபவத்திற்கு நேரெதிரான இரு ஜென்டில்மென் அரசியல்
வாதிகளைச் சந்தித்த ரயில் பயணம் அது” என்று கட்டுரையை முடித்திருந்தார்.
ரயில் பயணம் வாழ்க்கைப் பாடம் தானே?