தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி, தங்க முலாம் பூசப்பட்ட 12 அடி உயர கலசம் ஸ்ரீவிமானத்தில் (கருவறை கோபுரம்) வியாழக்கிழமை பொருத்தப்பட்டது.
இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 5-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, இக்கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பெருவுடையாா் சன்னதி கருவறையில், 216 அடி உயரத்தில் உள்ள விமானத்தின் மீது இருந்த கலசம் புனரமைப்பு செய்வதற்காக ஜனவரி 5- ஆம் தேதி கீழே இறக்கப்பட்டது. மொத்தம் 12 அடி உயர இக்கலசம் 8 பாகங்களை உடையது.
இதுபோல, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், வாராஹி, சண்டிகேசுவரா் ஆகிய சன்னதிகளின் கோபுர கலசங்களும் இறக்கப்பட்டன.
தொடா்ந்து பாரம்பரிய முறைப்படி இக்கலசங்களைச் சுத்தப்படுத்தி, தங்க முலாம் பூசப்பட்டது. இதற்காக பெருவுடையாா் சன்னதி கலசத்துக்கு மட்டும் 190 கிராமும், மற்ற சன்னதிகளின் கலசங்களுக்கு 144 கிராமும் என மொத்தம் 334 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டன.
கருவறை விமானத்தின் மீது 12 அடி உயர பிரம்மாண்ட கலசம் பொருத்தும் பணி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. ஒவ்வொரு பாகமாகப் பொருத்தப்பட்டு, அதில் 225 கிலோ வரகு கொட்டி நிரப்பப்பட்டது. இப்பணிகள் பிற்பகல் 3.30 மணிக்கு முடிவடைந்தது.