டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் அயோத்தியின் பங்களிப்பு

உத்தரப்பிரதேச பொருளாதாரத்தை டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். 2029ல் டிரில்லியன் டாலர் பொருளாதாரம், அதாவது சுமார் ரூ.89 லட்சம் கோடி என்ற இலக்கை எட்ட முடியும் என்பதில் முதல்வர் திடமாக உள்ளார். இதில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது மாநிலத்தின் மொத்த உள்ளக உற்பத்தியில், அயோத்தி நகரின் பங்கு 1.5 சதவீதமாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில் இது கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 25ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கோபுரத்தின் உச்சியில் புனித காவிக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத், உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அயோத்தி பெரும்திட்டத்தின் அடிப்படையில் 2031க்குள் ரூ.85 ஆயிரம் கோடி முதலீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதில் கடந்த 5 ஆண்டில், ரூ.2,150 கோடி செலவு செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் அரசுக்கு வரி வாயிலாக, 18 சதவீதம் தொகை கிடைத்துள்ளது.

ரியல் எஸ்டேட் உச்சம் பெற்றுள்ளது. ஆன்மீகச் சுற்றுலா பன்மடங்கு பெருகியுள்ளது. ஆக்ராவையும், வாரணாசியையும், அயோத்தி விஞ்சி விட்டது. அயோத்திக்கு 2023ல் 5.75 கோடி பேர் வந்தனர். 2024ல் இந்த எண்ணிக்கை 16 கோடியாக உயர்ந்து விட்டது. நிகழாண்டில் முதல் 6 மாதங்களில் இந்த எண்ணிக்கை 23 கோடியாக அதிகரித்து விட்டது.

மகா கும்ப மேளாவின் போது மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து மக்கள் திரள் திரளாக வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போது சுற்றுலா வாயிலாக, அயோத்திக்கு ரூ.10,000 கோடி கிடைக்கிறது. இது 2028ல், இரு மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2028ல், சுற்றுலா வாயிலாக உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.70,000 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தியின் பங்களிப்பு ஏறத்தாழ கால் பங்காகும்.
உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாக் கேந்திரமாக அயோத்தியை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் கூட்டாக ரூ.5,000 கோடியை முதலீடு செய்கின்றன.

அயோத்தி மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போது 11 லட்சம் பேர் வசிக்கிறார்கள். 2031ல், மக்கள் தொகை 24 லட்சமாக உயரும், 2047ல் இது 34 லட்சமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக சுமார் 70 தேசிய, சர்வதேச பிரபல ஹோட்டல்கள் அயோத்தியில் திறக்கப்பட்டுள்ளன. உணவு விற்பனை அதிகரித்துள்ளது. இதைப்போல பூஜை சார்ந்த பொருட்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

அயோத்தியை சூரிய சக்தி உற்பத்தி மையமாக மாற்ற மாநில அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது டிரில்லியன் டாலர் இலக்கை எட்டுவது சுலபமே என்பது புலனாகிறது.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து

தமிழில் : நிகரியவாதி