டிரம்ப் ஆட்டத்தால் சலசலப்பு பாரதம் பனங்காட்டு நரி!

பிரதமர் சாஸ்திரி காலத்து பாகிஸ்தான் போர்,  வாஜ்பாய் காலத்து போக்ரான் அணுசக்தி சோதனையின் போது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை,  கொரோனா காலத்தில் தடுப்பூசி மருந்துக்கு மேற்கு நாடுகள் காட்டிய கேவலமான அணுகுமுறை போன்ற சவால்களை ஒன்று விடாமல் நல்வாய்ப்புகளாக மாற்றி புதிய வேகத்துடன் முன்னேறிய நாடு நம் நாடு.
பாரத நாட்டிற்கு எதிரான தீய சக்திகளை வளர்த்து விட்ட பைடன் அரசை வீட்டிற்கனுப்பியவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். அதனால் அவரை வரவேற்றோம். ஆனால்  டிரம்பை கட்டித் தழுவி உச்சி முகரவில்லை.

சர்க்கஸ் பஃபூன் கையில் உள்ள இரண்டு பக்கமும் சுடும் துப்பாக்கியைப் போன்றவர் டிரம்ப். இது மத்திய அரசுக்கு நன்கு தெரியும்.

எடுத்துக்காட்டாக: அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருட்களுக்கு கட்டணத்தை பத்து சதவீதம் உயர்த்தினார் டிர்ம்ப்.  சீனா பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து வரும் பொருள்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தப் போகிறது.

ஐரோப்பிய நாடுகள் வேறு வழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுகின்றன. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ஆட்டத்தைக் டிரம்ப் கட்டுப்படுத்துவதால், பிரிட்டன் தலைமையில் உக்ரைனை உசுப்பி விட்டு போர் நிறுத்தம் வருவதற்கு முட்டுக்கட்டை போடுகின்றன.
அமெரிக்காவிற்குள்ளேயே,  நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்களாலும், முன்னாள் ஆட்சியாளர்களாலும் டிரம்ப் அரசு விளாசல்களை சந்திக்கிறது. புதிய அரசின் இறக்குமதி கட்டண உயர்வினால் உற்பத்திச் செலவு அதிகமாகி, உற்பத்திச் சுணக்கம், விலைவாசி ஏற்றம், சந்தையில் தேக்கம், மந்தம், புதிய முதலீடுகளில் இறங்கு முகம்,  பங்குச் சந்தை சரிவு, வேலைவாய்ப்பு குறைவு என்று  சங்கிலித் தொடராக பாதிப்புகள்.
ஊரறியாத சங்கதிகளும் உண்டு. ஜனாதிபதிகள் வரலாம், போகலாம். டீப் ஸ்டேட், வணிக லாபிகள், சுயகாரியப் புலிகள் என சட்டங்களையும் மீறி ஆட்டம் போடும் சக்திகள் வைப்பதே சட்டம் என்பது அமெரிக்க நிதரிசனம். ஒரு உதாரணம்: 1970-−80 களில் அமெரிக்க அரசு ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது; செல்வாக்கு மிக்க அமெரிக்க ஆயுத வியாபாரிகள் அதே ஈரானுக்கு ஆயுதங்களை விற்றார்கள்! இது ஈரான் கேட் என்று பிரபலமானது. எனவேதான் அமெரிக்க அரசின் முயற்சிகள் அவர்களையே திருப்பித் தாக்கும் என்கிறார்கள்.
அது சரி, நமக்கென்ன?
நம்முடைய ஏற்றுமதிகளுக்கும் சோதனைக் காலம் தான்.

இரண்டாவதாக, நம் பாரத இளைஞர்கள், குடும்பங்கள் பெருமளவில் அங்கே வசிக்கிறார்கள். அங்கே வேலை வாய்ப்பு,  தொழில்,  வியாபாரம் குறைந்தால் நம் மக்களுக்கு இன்னல் காத்திருக்கிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர், எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும், சர்வே பவந்து சுகினஹ என்றவாறு உயர்ந்த சிந்தனை பாரத நாட்டின் தனிச்சிறப்பு. சுயநலத்தையும் தாண்டி (அமெரிக்கா உள்ளிட்ட) உலக அமைதியை, நல்வாழ்வை நாடுவோர் நாம்.

அனுபவம் தந்த பாடம் இப்பொழுது பாரத நாட்டிற்கு தற்காலிக இடையூறு, வளர்ச்சியில் தொய்வு, டாலர் விலை ஏற்றம் என்பன போன்ற பிரச்சினைகள் தலைதூக்கலாம். நமக்கு இவை புதிதல்ல. நாம் வளர்ந்து வந்த பாதை மலர்ப் படுகை அல்ல. கல்லும் முள்ளும் (தடைகள், எதிர்ப்புகள்) கடந்து, முறியடித்தே வந்திருக்கிறோம்.
இப்போது முதலாவது பத்தியை மீண்டும் ஒரு தடவை படியுங்கள்!