ஜி20 அமைப்பின் முதலாவது வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழுக் கூட்டம், மும்பையில் 2023 மார்ச் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். முதல் நாள் நடைபெறும் கருத்தரங்கு, வர்த்தக நிதி தொடர்பாக நடைபெறவுள்ளது. வர்த்தக நிதி இடைவெளியை நிரப்புவதில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஏற்றுமதி கடன் அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பங்கு குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. 2வது நாள் கூட்டத்தை மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைக்கிறார். அதை தொடர்ந்து வர்த்தக நடவடிக்கைகளை வளர்ச்சிக்காக பயன்படுத்துதல், மீட்சித் தன்மையுடன் கூடிய உலகளாவிய மதிப்பு சங்கிலியை கட்டமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக இரண்டு அமர்வுகளில் விவாதிக்கப்படுகிறது. நிறைவு நாள் கூட்டத்தின் போது, உலகளாவிய வர்த்தகத்தில் குறு சிறு நடுத்தர நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் திறன்வாய்ந்த சரக்குப் போக்குவரத்து நடைமுறையை கட்டமைத்தல் ஆகியவை தொடர்பாக இரு அமர்வுகளின் ஆலோசனை மேற்கொள்ளப்படும். முந்தைய ஜி20 தலைமைத்துவ நாடுகள் ஆற்றிய பணிகளை முன்னெடுத்து செல்வதுடன், சவால்களை சமாளித்து உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டை துரிதப்படுத்துவதை பாரதத்தின் ஜி20 தலைமைத்துவம் நோக்கமாக கொண்டுள்ளது.