ஜாபர் சாதிக்குடன் என்ன தொடர்பு? அமீரிடம் 12 மணி நேரம் விசாரணை!

போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, திரைப்பட இயக்குனர் அமீரிடம், 12 மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, போதைப் பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, திரைப்பட இயக்குனர் அமீருக்கு, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், டில்லியில் உள்ள, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமீர் ஆஜரானார். இவரிடம், போதை பொருள் கடத்தல் தொழிலில் தொடர்பு உள்ளளதா என்பது குறித்து, அதிகாரிகள், 12 மணி நேரம் விசாரணைசெய்தனர்.

‘ஜாபர் சாதிக்கின் கடத்தல் தொழில் சாம்ராஜ்யம் குறித்து எதுவுமே தெரியாது. ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து ஹோட்டல் துவங்கினேன். நான் இயக்கி வரும்,இறைவன் மிகப்பெரியவன்படம் தயாரிப்பு தொடர்பாகவே பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்தேன்’ என, அமீர் வாக்குமூலம் அளித்துள்ளார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘அமீரை கைது செய்து விசாரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்படவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார். முக்கிய சாட்சியாக விசாரிக்கப்படுகிறார். ஜாபர் சாதிக்கை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்போது, அமீர் அழைக்கப்படுவார்.

இருவரையும் நேருக்கு நேர் அமரச் செய்து விசாரிக்க உள்ளோம்’என்றனர். சென்னை திரும்பி உள்ள அமீர், ‘விசாரணை குறித்து, மூன்று நாளில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி சொல்வேன். அதுவரை என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்’ என, வேண்டுகோள்விடுத்துள்ளார்.