ஜனநாயகம், கருத்துச் சுதந்திரத்தை வளர்த்தெடுப்பதாகக் கூறிக்கொண்டு தனது ஓப்பன் சொசைட்டி என்ற அறக்கட்டளை மூலம் அமெரிக்கா, பாரதம் உட்பட பல நாடுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்டி வருபவர் ஹங்கேரிய அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ். இவர், சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டார். இதனை கண்டித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ஜார்ஜ் சோரசின் இந்த பேச்சு பாரதத்தின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். சோரஸ் தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக பாரதத்தின் ஜனநாயகத்தை தகர்க்க விரும்புகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை குறிவைத்து ஒரு பில்லியன் டாலர் நிதி உதவி அறிவித்துள்ளார். மத்திய அரசு அவரது விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து செல்ல வேண்டும் என்று சோரஸ் நினைக்கிறார். பாரதத்தில் தனக்கு சாதகமான நபர்களை ஆட்சியில் அமர வைக்கும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்து வங்கியை சரிவுக்கு தள்ளியதால், அவர் பொருளாதார போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இப்போது அவர் பாரதத்தின் ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறார். பாரதம் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கும் இந்தத் தருணத்தில் அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். இது நமது தேசத்தின் மீதான போர். பாரதத்தின் உள்விவகாரங்களில் தலையிட முயற்சி செய்துவரும் அந்நிய சக்திகளை பாரத மக்கள் ஒன்றிணைந்து தோற்கடிப்பார்கள். ஜார்ஜ் சோரஸ் போன்று தேசத்தை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாங்கள் எதிர்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.