வலிவலத்தில் 20,000 சதுரஅடி பரப்பளவில் மண்டியிருந்த கருவேலங்காடு அழிக்கப்பட்டு, ஜூலை 7-ஆம் தேதி பசுமை வலிவலம் அமைப்பு, வனம் அமைப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில், ஒரே நாளில் 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. பறவைகளை வெகுவாக ஈர்க்கும் வகையில், பழவகைகள் அதிகம் கொண்ட சுமார் 65 வகையான 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நடப்பட்டதிலிருந்து தினமும் நீர் ஊற்றி, கம்பி வேலி அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த குறுங்காட்டினுள் மழைநீர் வீணாவதைத் தடுக்கும் பொருட்டு மழைநீர் சேகரிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் மரக்கன்றுகளில் தேங்காமல் மரக்கன்றுகளுக்கு நன்கு ஊட்டம் அளித்து அவை அனைத்தும் செழித்து வளர்கின்றன. நடப்பட்ட குறுகிய நாள்களிலேயே மரக்கன்றுகள் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ள அப்பகுதி தன்னார்வ இளைஞர்கள், இது பசுமையைப் பேணி பாதுகாக்க உந்துதலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.