செஸ்ஸூம் பாயஸமும்

ஆலப்புழா ஒரு சர்வதேச சுற்றுலா நகரம்.‘தென்னகத்து துவாரகை’ என அழைக்கப்படுவதுண்டு.துஞ்சத்து எழுத்தச்சன் மஹாபாரதம் போன்ற காப்பியங்களை மலையாளத்தில் மொழிபெயர்த்தது இங்கேதான்.திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் உற்சவ மூர்த்தியை இங்குகொண்டுவந்து வைத்திருந்ததாகக் கருத்துண்டு.இதனால், குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன், மதியம் அம்பலப்புழா சென்று பால் பாயசம் அருந்துவதாக ஐதீகம்.

பண்டு காலத்தில் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் அம்பலப்புழை ராஜா முன்பாக சென்ற கண்ணன், “இந்த ராஜ்யத்தில் என்னுடன் சதுரங்கம் ஆடி யாராவதுஜயிக்க முடியுமா?என்றார்.சதுரங்க ஆட்டம் மீது மாறாக் காதல் கொண்டிருந்த ராஜா சவாலை உவகையுடன் ஏற்கிறார்.மேலும், கண்ணனிடம், “சவாலில் நான்தான் வெற்றி காண்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் என்ன பரிசில் வேண்டும் என்பதைத் தாங்களே முடிவு செய்வீர்” என்றார்.முனிவர் வடிவில் வந்த கண்ணனும், “என்னைப் போன்ற ரிஷிகளுக்கு அரிசி வேண்டும்.நான் சொல்லும் முறையில் அரிசியைத் தாருங்கள். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று கோரினார்.

இத்தனை பெரிய ராஜ்யத்தில் வெறும் அரியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளும், என்று ராஜா சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்றார்.ராஜாவுக்குச் சற்றே வருத்தம்தான்.ஆனாலும் அரிசிதானே என்று குதூகலத்துடன் ஆடத் துவங்கினார்.ஆரம்பமானது சதுரங்க விளையாட்டு.  கண்ணனுடைய விளையாட்டாயிற்றே!ராஜா ஆட்டமிழந்தார்.

சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது.ஒவ்வொரு  கட்டத்திலும் முனிபுங்கவர் கேட்டபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ராஜாவுக்குத் தன் தவறு புரிந்துவிட்டது. முனிவரின் உண்மையான கோரிக்கையை உணரத் தொடங்கினார்.20வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40வது கட்டத்தில் அது பல மில்லியன்களாக உயர்ந்த படி வடிவியல் முன்னேற்றம் (geometric progression) கணக்கில்  வளர்ந்துகொண்டே போனது. ராஜ்யக் களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல் அனைத்தும் தீர்ந்து போயிற்று. அருகிலுள்ள  ராஜ்யங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கட்டங்களில் போட்டாயிற்று.64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) – 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி வேண்டுமே!!!முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது ராஜா கையைப் பிசைந்தார்.

ராஜாவின் நிலையுணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் தன் சுயவடிவில் அவர் முன் தோன்றினார்.”அரிசியை உடனடியாகத் தர வேண்டாம்.உன் கடன் தீரும்வரை அம்பலப்புழை ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயஸம் பண்ணிக் கொடு,” என்று பணித்தார். ராஜாவின்  கர்வம் ஒழிந்தது.  தமது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தார்.அம்பலப்புழை ஸ்ரீ கிருஷ்ணன்  ஆலயத்தில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்குப் பிரஸாதமாகக் கொடுக்கப்படுகிறது.