செஸ் விளையாட்டு எனும் அற்புதம்

நீடாமங்கலம் ஊருக்கும் மன்னார்குடிக்கு இடையில் பூவனுர் என்கிற தளத்தில் கோவில் கொண்டிருக்கும் சிவபிரானுக்கு  சதுரங்க வல்லபநாதர் என்ற பெயரே உள்ளது.  சிவபிரானுக்கு இந்தப் பெயர் வந்ததற்கு பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது. தென்பாண்டி நாட்டு அரசன் வசுசேனன், அவனது இல்லத்தரசி காந்திமதி.  இவர்களுக்கு வெகுகாலமாக குழந்தையில்லை. சிவபெருமானை தொடர்ந்து அவர்கள் வழிபட்டு வந்தனர். இறையருளால் ஒருநாள் அரசன் நீராடிய குளத்தில் ஒரு தாமரை மலரில் ஒரு சங்கைக் கண்டான். அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஒரு அழகிய பெண் குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான்.

சாமுண்டிதேவி சப்தமாதர்களில் ஒருவர். அவர் அக்குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக வர ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ்பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். அரசன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டி, மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று தீர்மானித்தான். பல அரச குமாரர்கள் வந்தனர். அனைவரும் அவளிடம் தோற்றுப் போனார்கள். மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று வருத்தப் பட்டான். இறுதியில், இறைவன் மீது பாரத்தைப் போட்டு தலயாத்திரையாக  மகளுடன் கிளம்பிச் சென்றான். அநேக சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருப்பூவனூர் வந்தான். புஷ்பவனநாதரை வழிபட்டான்.

மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி வந்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து என்னுடன் சதுரங்கம் ஆடி உன்னால் வெல்ல முடியுமா என்று கேட்டார். அரசன் மகளும் சதுரங்க ஆட்டம் ஆடினார். அன்றுவரை இந்த ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள், அந்த முதியவரிடம் தோற்றுப் போனாள். அரசன்; தன் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று சந்தோஷப்பட்டாலும் வாக்குப்படி ஒரு வயோதிகருக்கு தன் மகளை மணம் முடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான். சிவபெருமானை தியானித்தான். கண்சிமிட்டும் நேரத்தில் முதியவர் மறைந்து அங்கே சிவபெருமானே நிற்கக் கண்டான். இதனால் மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தான். இதனால் இத்தலத்து இறைவன் சதுரங்க வல்லப நாதர் எனப்படுகிறார்.

இப்போது சொல்லுங்கள், சதுரங்கம் விளையாட்டு நம் நாட்டில் வேரூன்றிப் பிறந்த விளையாட்டு மட்டுமின்றி பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையானது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம் என்று!!!

தொடரும்                                                                                                                   ஆர். கிருஷ்ணமூர்த்தி