செய்தித்தாள்களில் கொட்டை எழுத்தில் முதல் பக்கத்திலேயே தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் குறித்த செய்திகள், பிற ஊடகங்களில் பிரேக்கிங் அல்லது முன்னனிச் செய்திகள் என்று படித்து, பார்த்துக் குதூகலிக்கும் அளவுக்கு சதுரங்க விளையாட்டு இன்று பிரபலமாகி வருகிறது. அரசர்களின் விளையாட்டு இது என ஒரு நேரத்தில் வருணிக்கப்பட்ட விளையாட்டாக இருந்தது. சில விளையாட்டுக்களில் திறம்பட விளையாட தந்திரம் மட்டும் இருந்தால் போதுமானது. வேறு சில விளையாட்டுக்களுக்கு அதீத கவனமும் புத்திசாலித்தனமும் தேவை. ஆனால் செஸ் விளையாட்டில் மேம்பாடு காட்ட மதியூகமும், தந்திரமும், நேரமும் மிக அவசியம். தற்காலங்களில் இவ்விளையாட்டானது பள்ளிக்கூட பாடத் திட்டங்களிலும் கூட கொண்டுவரப்பட்டுள்ளது. இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு இது.
சில பூங்காக்கள், வீடுகளில் அதீத அமைதி தவழ்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களை அடிக்கடி நாம் கண்டு வருகிறோம். அத்தகைய இடங்களில் அருகில் சென்று பார்த்தால் இரண்டு பேர் அமைதியாக சதுரங்கப் பலகை முன் கன்னத்தில் கைகளை வைத்து யோசித்து செஸ் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை மிக சாதாரணமாகப் பார்க்கலாம். இன்று உலகம் முழுவதிலும், அகாடெமிகளில், இணையதளங்களில் போட்டித்தொடர்களாக அதுவும் அடிக்கடி நடந்து வருகின்றன.
முன்பெல்லாம் கேரம் விளையாட்டு புகழ் பெற்றிருந்தது. இன்றும் கூட குடிசை முதல் கோபுரம் வரை கேரம் புகழ்பெற்றதுதான். ஆனால் சதுரங்கம் விளையாட்டாக மட்டுமன்றி ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கும் அளவுக்கு ட்ரெண்டி ஆகி வருகிறது. விளையாட்டு முடியாமல் சில நேரங்களில் போர் விளையாட்டாகவும் சதுரங்க விளையாட்டை சிலர் கருதப்படுவதுண்டு. ஆனால் இது ஒரு “மூளை சார்ந்த போர்க்கலை” யாக இளைஞர் மற்றும் அனைத்து வயதினரும் பார்க்கின்றனர்.
சதுரங்கம் விளையாட்டு 1,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பின்னணி எனக் கருதப்படுகிறது. இவ்விளையாட்டு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே பாரதத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. ஆனால், தமது அடியார்களின் பக்தியை சோதித்து அருளும் உளம் கொண்டிருந்த உமையொரு பாகன், மன்னன் மகளை மணமுடிக்க சதுரங்கம் விளையாடி வென்று அவள் கழுத்தில் மணமாலை சூட்டிய தொன்மை வரலாறு இதற்குண்டு.
ஆர். கிருஷ்ணமூர்த்தி
தொடரும்…