சென்னையில் இஸ்ரோ தலைவர் டாக்டர் நாராயணனுக்கு பாராட்டு விழா

சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி கலையரங்கில் மார்ச் 16 அன்று அனைத்து சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் வ.நாராயணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி,

வடதமிழக ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளர் பிரஷோப குமார், அமிர்தா விஸ்வ வித்யாபீட இயக்குனர் சுவாமி வினய் அமிர்தானந்த புரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சுவாமி வினய் அமிர்தானந்த புரி ஆசியுரை

அதில் சமுதாயம் சிறக்க உழைப்பு மிக மிக அவசியம். உலகாயத வாழ்விலும் சரி, ஆன்மீக வாழ்விலும் சரி, உழைப்பு மிகவும் அவசியம் என்பதை மாதா அம்ருதானந்தமயி அம்மா வலியுறுத்திக் கூறுகிறார். உழைப்பு சுயநலமற்ற சேவைப்பணியாக இருக்க வேண்டும். இரவு பகல் பாராமல் அயராது உழைத்ததன் காரணமாக,   பாரதத்தின் கடைக்கோடியில் உள்ள சாதாரண  கிராமத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் வழியில் கற்றிருந்தாலும், இரவு பகல் பாராது அயராது உழைத்ததன் பயனாக தடைகளை எல்லாம் தாண்டி தனது அயராத முயற்சி காரணமாக உழைப்பின் வழியாக மிக உயர்ந்த உன்னத நிலைக்கு உயர்ந்துள்ளார். இன்று பாரதம் உலகின் முன் எல்லா துறைகளிலும் தலை நிமிர்ந்து நிற்கிறது. எல்லாத் துறைகளிலும் மேலோங்கி வருகிறது. இஸ்ரோ பல  அரும்பெரும் சாதனைகளை செய்து நமது நாட்டின் பெருமையை உலகறிய செய்து வருகிறது. பெருமைக்குரிய இஸ்ரோவில் நமது விழா நாயகர் முனைவர் நாராயணன் முக்கிய பங்களிப்பை செய்துள்ளார்.

நாம் அனைவரும் ஒன்று என்று ஈஷாவாஸ்ய உபநிஷத் சொல்கிறது. கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் இறைவன் நிறைந்து இருக்கிறான் என்பது மையக் கருத்தாக உள்ளது. இதைத் தான் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில் கூறப்படுகிற மந்திரம் தான், “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்பதாகும். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பது இதன் பொருள். இந்த தர்மமானது  அனைவருடைய மனங்களிலும் வேரூன்ற வேண்டும். இறைவனது பேரருளால் சனாதன தர்மத்தின் வழிகாட்டலால் பாரத நாடு மேன்மேலும் உயர்ந்து உலகின் ஆன்மீக குருவாகவும், அறிவியல் குருவாகவும், உலகத்தை ஒன்றிணைக்கும் தலைமை நிலையில் வர வேண்டும். இஸ்ரோ அமைப்பானது நமது விழா நாயகர் டாக்டர் நாராயணன் தலைமையில் மேன்மேலும் அரிய சாதனைகள் படைத்து, பாரத தேசம் உன்னத நிலையை அடையச் செய்யவும், உலகம் நலம் பெற பயன் விளைவிக்கும் செயல்களில் வெற்றி பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடமும், சத்குரு மாதா அம்ருதானந்தமயி அம்மாவிடமும் வேண்டிக் கொள்கிறேன்.”என்றார்.

சைதை துரைசாமி வாழ்த்துரை

“உலக சரித்திரத்தில் இடம்பெற்றவர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இந்த மாமனிதரைப் பாராட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் அனைவருமே பெருமைக்குரியவர்கள்; போற்றுதலுக்குரியவர்கள்; மிகச்சிறந்த வாய்ப்பை பெற்றவர்கள் என்று நான் கருதுகிறேன். “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” எத்தகைய மகிழ்ச்சி அடைவாளோ அப்படி, இந்த விழாவில் பெறாத பெற்றோராகப் பங்கு பெற்றிருக்கும் அத்தனை பெருமக்களையும் வாழ்த்துகிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கையெழுத்திடும்போது உழைப்பே உயர்வு தரும் என்று எழுதி கையெழுத்திடுவார். உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு உதாரண புருஷராக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் டாக்டர் நாராயணன் ஐயா அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.

பிரசோபகுமார்
(மாநில அமைப்பாளர், வட தமிழக ஆர்.எஸ்.எஸ்)

உலக நாடுகளின் மத்தியில் நம் நாட்டின் பெருமையை ஓங்கச் செய்ய அயராது உழைக்கும் டாக்டர் நாராயணன் போன்ற ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ரிஷிகளுக்கு ஒப்பானவர்கள். ஒரு விஷயத்தைக் குறித்து தீரக்கமாக ஆராய்ச்சி செய்பவர்கள் ரிஷிகள். அப்படி ஆயிரக்கணக்கான ரிஷிகளின் தவமே இஸ்ரோ போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களின் வெற்றிகள்!

சுவாமி விவேகானந்தரும் ஜாம்ஷெட்ஜி டாடாவும்

இந்த வெற்றிகளின்  அடிப்படை என்ன? 1893 ஆம் ஆண்டு ஜப்பானிலிருந்து அமெரிக்கா செல்லும் கப்பலில் இரண்டு பாரத புத்திரர்கள் உரையாடிக் கொண்டு சென்றார்கள்.ஒருவர் சுவாமி விவேகானந்தர். மற்றொருவர் இந்த நாட்டின் தொழில் பிதாமகன் ஆக பிற்காலத்தில் அறியப்பட்ட ஜாம்செட்ஜி நெசவான்ஜி டாடா. சுவாமி விவேகானந்தர் டாடாவிடம், “இந்த நாட்டின் ஆன்மீகமும் அறிவியலும் இணைந்தால், மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு பாரதம் உலகின் குருவாக விளங்கும்!” என்றார்.

அந்தக் கருத்து டாடாவின் மனதில் ஆழமாக பதிந்தது.  பெங்களூருவில் INDIAN INSTITUTE OF SCIENCE என்ற ஆய்வு நிறுவனத்தை தொடங்கப் போவதாக டாட்டா 1905 ஆம் ஆண்டு  சுவாமி விவேகானந்தருக்கு கடிதம் எழுதினார். அந்த நிறுவனம் 1911ஆம்  ஆண்டு உருவானது. இதனுடைய தாக்கம் என்ன? இஸ்ரோவின் 11 தலைவர்களில் 2 இரண்டு பேரைத் தவிர அனைவரும் தென்இந்தியர்கள். இரண்டு பேர் மட்டுமே வட இந்தியர்கள். அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் மூன்று பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். டாக்டர் மாதவன் நாயர், டாக்டர் சிவன், டாக்டர் நாராயணன் ஆகிய மூன்று பேரும் குமரி மண்ணின் மைந்தர்கள். இப்படி சிவநாராயண மாதவ பரம்பரை உருவாகியுள்ளது. பாரதத்தின் அதிஉன்னத சக்தியை வெளிப்படுத்தி வல்லரசாகத் திகழ உருவான புதிய பரம்பரை இது! தன் அறிவியல் ஆற்றலை வெளிப்படுத்தி உலகின் குருவாக மிளிர்கிறது பாரதம்! ராக்கெட் மற்றும் கிரையோஜெனிக் இன்ஜினின் மூளையாக இருக்கக்கூடிய டாக்டர் நாராயணனுக்கு அன்னை பராசக்தி அனைத்து ஆற்றல்களையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.” என்றார்.

… அடுத்த வாரம் டாக்டர் நாராயணன்
உரை இடம் பெறும்