சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றார். மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் ரூ.5,060 கோடி நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய 24 மணி நேரத்துக்குள், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இணை அமைச்சர் எல்.முருகனுடன் தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் மோடி. இதுபோன்ற புயல் பாதிப்புகள் வரக்கூடாது என்பதற்காகதான், மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட திட்டங்களுக்காக கடந்த 2015-ல் அம்ருத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு பிரதமர் மோடி ரூ.4,397 கோடி வழங்கினார்.
இந்த ஆண்டு பேரிடர் நிவாரண நிதிக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே ரூ.450 கோடி வழங்கியுள்ளது. தற்போது ரூ.450 கோடி ஒதுக்கியுள்ளது. அந்த வகையில், மத்திய அரசு தனது பங்கு ரூ.900 கோடியை வழங்கிவிட்டது. அதற்கு சரிசமமாக பேரிடர் நிதிக்கு மாநில அரசு ரூ.900 கோடி வழங்க வேண்டும். அந்த வகையில், பேரிடர் நிவாரண நிதி கணக்கில் ரூ.1,800 கோடி இருக்க வேண்டும்.
“சென்னையில் 97 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டன. இனி எந்த பிரச்சினையும் வராது” என்று ஓராண்டுக்கு முன்பு திமுக அரசுதான் சொன்னது. ஆனால், இதுவரை வெள்ளம் வராத இடங்களில் எல்லாம் தற்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் சுத்தமாக வேலை செய்யவில்லை. ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவின் அறிக்கை என்ன ஆனது. அம்ருத் திட்டத்தில் மத்திய அரசு வழங்கிய ரூ.4,397 கோடி என்ன ஆனது. இதைவிட, திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் யாரும் களத்தில் இல்லை என்பதில்தான் அனைவருக்கும் கோபம். அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
திமுகவிடம் கேட்க இதுபோல நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆனால், இந்த நேரத்தில் குற்றம்சாட்டவோ, இதை அரசியலாக்கவோ நாங்கள் விரும்பவில்லை.
பாஜக அலுவலகத்துக்கு வந்திருக்கும் நிவாரண பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அதேநேரம், சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதி என்ன ஆனது, அதில் செய்த செலவு என்ன, ஒப்பந்ததாரர்கள் யார் என்பதையெல்லாம் நீதிபதி தலைமையில் தணிக்கை செய்ய முதல்வர் ஒப்புக்கொள்வாரா? என்றார்.