செந்தில் பாலாஜிக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன்

அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 120 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் 2011 – 2015 ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர், தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி. தான் அமைச்சராக இருந்த போக்குவரத்துத் துறையில் 81 பேருக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.1.62 கோடி பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 2018-ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கடந்த 14-ம் தேதி கைது செய்தது. இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய 120 பேருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 6-ம் தேதி உரிய ஆவணங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

2018-ல் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.