சீமைக்கருவேல மரங்களை அகற்ற கொள்கை வகுத்து 2 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான கொள்கைகளை வகுத்து 2 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவைக் கூட்டி சீமைக்கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை வகுக்க உத்தரவிட்டுள்ளனர்.
வைகோ உள்ளிட்டோர் வழக்கு: தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சீமைக்கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
மாநில அரசின் கடமை: அந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், ‘‘மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற டெண்டர் கோரலாம். அத்துடன் இதுதொடர்பாக அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடலாம்’’ என யோசனை தெரிவித்தனர். மேலும், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, தமிழக அரசு கொள்கைகளை வகுத்து 2ஆண்டுகளாகியும், எந்த முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என தெரிவித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமம் என எந்த கிராமத்தையும் அடையாளம் காட்ட முடியாது என்றனர். அதன்பிறகு, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலர்கள் அடங்கிய உயர் நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டி திட்டம் வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜன.8-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.