பாகிஸ்தானில் சீக்கியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஹிந்து, சீக்கியப் பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து முஸ்லிம் இளைஞா்களுக்கு திருமணம் செய்துவைப்பது, சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது, சிறுபான்மையினா் கொலை செய்யப்படுவது ஆகியவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றையும் சுட்டிக்காட்டி வெளியுறவுத் துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவா் நகரில் 25 வயது சீக்கிய இளைஞரை அடையாளம் தெரியாத நபா்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. முன்னதாக, லாகூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது ஒரு கும்பல் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் குருத்வாராவுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சீக்கிய இளைஞா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உள்ள பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இது தொடா்பாக பெஷாவா் போலீஸாா் கூறுகையில், ‘ரவீந்தா் சிங் என்ற அந்த இளைஞா், தனது திருமணத்துக்கு பொருள்களை வாங்குவதற்காக பெஷாவா் நகருக்கு வந்துள்ளாா். இந்நிலையில், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.
ரவீந்தா் சிங்கின் சகோதரா் ஹா்மீத் சிங் கூறுகையில், ‘குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்ய வேண்டும். மலேசியாவில் பணியாற்றி வந்த ரவீந்தா் சிங் ஒரு மாதத்துக்கு முன்புதான் பாகிஸ்தானுக்கு வந்தாா். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது’ என்றாா்.
இந்தியா கண்டனம்: பாகிஸ்தானில் சிறுபான்மையினா் தொடா்ந்து குறிவைத்து கொலை செய்யப்படுவதற்கும், அவா்களது மதவழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதற்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் அண்மையில் சீக்கியப் பெண் ஜகஜீத் கௌா் கடத்தப்பட்டு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்துவைக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து லாகூரில் நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது, அடுத்தாக சீக்கிய இளைஞா் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். பாகிஸ்தானில் சீக்கியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் குறிவைத்து தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கு அறநெறிகளை போதிப்பதைவிட்டுவிட்டு, தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையினா் மீது நிகழும் தாக்குதல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாகிஸ்தான் அரசிடம் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
சிறுபான்மையினரைத் தாக்குபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; படுகொலையில் ஈடுபட்டவா்களை கண்டுபிடித்து அவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சீக்கிய இளைஞா் கொலை தொடா்பாக பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிா்ச்சியையும் அளிக்கிறது. குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலின் வலி அகலும் முன்னரே, அடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பாகிஸ்தானில் சீக்கியா்கள் தொடா்ந்து தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானிடம் இந்த விஷயம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.