1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. அப்போது காஷ்மீரின் பெரும் பகுதி இந்தியா வசமானது. சுமார் 30 சதவீத பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். சிலரின் பலவீனம், தவறால் அந்த பகுதி தற்காலிகமாக நம்கையை விட்டு நழுவியிருக்கிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக சீன அரசு தொழில் வழித்தடத்தை அமைத்திருக்கிறது. அந்தப் பகுதியை பாகிஸ்தானோ, சீனாவோ சொந்தம் கொண்டாட முடியாது. அது இந்தியாவுக்கு சொந்தமான பகுதி ஆகும்.
நான் சீனாவில் இந்திய தூதராகப் பணியாற்றி உள்ளேன். எனதுகணிப்பின்படி சீனாவின் கைப்பாவையாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை நீங்கள் (பாகிஸ்தான்) ஆக்கிரமித்து இருக்கலாம். அங்குசாலை, கட்டிடங்களை அமைக்கலாம். ஆனால் அந்த இடம் சட்டப்பூர்வமாக இந்தியாவுக்கு சொந்தமானது. 1963-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5,000 கி.மீ. தொலைவு பகுதிசீனாவுக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் செல்லாது.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து இந்தியாவில் யாரும் பேசவில்லை. தற்போதைய பாஜக ஆட்சியில் அந்த இடத்தை மீட்போம் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து வாக்குறுதி அளித்து வருகின்றனர்.
அண்மைகாலமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகபோர்க்கொடி உயர்த்தி போராடி வருகின்றனர். கடந்த சில நாட்களில் அங்கு ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்தமோதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இந்தியாவுடன் இணைய பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளன.