‘சிஏஏ-வால் இஸ்லாமியருக்கு ஆபத்து என்று நிரூபித்தால் ரூ.10 லட்சம் தருகிறேன்’ என விருதுநகரில் பாஜக சார்பில் நடந்த பேரணியில் ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் இப்ராஹிம் பேசினார்.
விருதுநகரில் பாஜக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.
முன்னதாக ,விருதுநகர் – மதுரை சாலையில் உள்ள பிவிஆர் சிலை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் இப்ராஹிம் கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், “இந்தக் கூட்டத்தில் பங்கேற்றால் என் தலையைத் துண்டித்து விடுவதாக சிலர் மிரட்டல் விடுத்தனர். நாட்டுக்காக மரணித்தால் தேசபக்தன் என்றுதான் பெயர் என்று கூட்டத்துக்கு வந்திருக்கிறேன்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு இஸ்லாமியருக்காவது ஆபத்து என்று நிரூபித்தாலும் ரூ.10 லட்சம் தரத் தயாராக உள்ளேன். இதை சவாலாக அறிவிக்கிறேன்.
மதத்தை முன்னிறுத்தியே இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. உணர்ச்சிகளை தூண்டிவிட்டு சிலர் அரசியல் செய்கிறார்கள். என்.பி.ஆர். என்.ஆர்.சி. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவையே. அதற்கு, திமுகவும் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாடு பாதுகாப்பாக உள்ளது. அதற்காக பிரதமரின் கரத்தை வலுப்படுத்துவது இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரின் கடமை ” என்றார்.
அவரைத் தொடர்ந்து பாஜக மாநில இளைஞரணி தலைவர் செல்வம் பேசுகையில், “தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேச அகதிகள் ஒருவர் கூட கிடையாது. ஆனால் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கலவரத்தைத் தூண்டிவிட பிரச்சினைகள் செய்கின்றன.
இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்றால் நாங்கள் அதற்காக போராடுவோம். காங்கிரஸ் கட்சியும் திமுகவும் மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கின்றன.
எந்த ஒரு நாடும் வழிதவறி தனது நாட்டுக்குள் வருவோரை அனுமதிக்காது. குடிமக்களை பிரித்துப் பார்க்காத கட்சி பாஜக. காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தற்போது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையினரின் குழந்தைகளுக்கான கல்வி உதவிக்காக மத்திய அரசு ரூ.8,318 கோடி வழங்கியுள்ளது.
இது காங்கிரஸ் அரசு ஒதுக்கியதை விட 22 சதவீதம் அதிகம். மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டி விடுவதை சிலர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்களைப் பிரித்து மதக்கலவரத்தை தூண்டும் நபர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கிறோம்” என்றார்.
அதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவில், பஜார், தெப்பம், நகராட்சி அலுவலகம் வழியாக எம்ஜிஆர் சிலை வரை பாஜகவினர் பேரணியாகச் சென்றனர். இதில் மாவட்டs செயலாளர் கஜேந்திரன், ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.