ஜிடிபி குறித்த சாதகமான புள்ளி விவரங்கள் வெளியானதன் எதிரொலியால் பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியது.
நடப்பு 2023-24 நிதியாண்டின் 2-வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ரிசர்வ் வங்கியின் மதிப்பீடான 6.5 சதவீதத்தை காட்டிலும் அதிகம். இதற்கு, தயாரிப்பு துறையின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததே முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தல் தொடர்பாக வெளியான கருத்து கணிப்புகளும் ஸ்திரமான அரசு அமைவதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்ததால் முதலீட்டாளர்களிடையே நேர்மறையான எண்ணம் மேலோங்கியது.
அதன் காரணமாக, பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. நிஃப்டி 0.67 சதவீதம் அதிகரித்து 20,267 புள்ளிகள் என்ற புதியஉச்சத்தை தொட்டது. அதேபோன்று சென்செக்ஸ் 0.74 சதவீதம் உயர்ந்து 67,481 புள்ளிகளை எட்டியது. சென்செக்ஸ் பட்டியலில் விப்ரோ, டைட்டன், ஹெச்சிஎல் டெக், இன்போ சிஸ் தவிர்த்து ஏனைய பங்குகள் அனைத்தும் ஏற்றம் கண்டன.