சரியான தருணத்தில் வரும் திட்டம்

சரியான தருணத்தில் வரும் திட்டம்

முதுமை குறித்த LASI எனப்படும் Longitudinal Ageing Study in India ஆய்வு 1950ல் சராசரியாக மனிதர்களின் ஆயுட்காலம் 35.3 என்றது. அது 1980ல் 53.5 என்றும், 2010ல்  66.5 என்றும் உயர்ந்து 2024ல் 70.6 என்றும் முன்னேறியுள்ளது.  இப்படி 70 வயதைக் கடந்தவர்களில் பெரும் சதவீத்தினர் விதவைகள் என்பதும் ஒரு முக்கிய தகவல்.  வாழ்நாள்  கூடிவிட்டது சரி,  ஆனால் ஆரோக்கியம்? இதனை உணர்ந்து சரியான தருணத்தில் வந்துள்ள இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன்.

திட்டத்தில் குறிப்பிடப்பட  வேண்டிய விஷயம் என்னவென்றால், மூத்த குடிமக்கள் பலர் 45 அல்லது 50 வயது முதலே பல நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தாலும் (pre- existing diseases) அத்தகையவர்களும் திட்டத்தில் சேரலாம்.

மத்திய அரசு 60 % (வட கிழக்கு மாநிலங்களில் 90%), மாநில அரசு 40 % என்ற அடிப்படையில் திட்டச் செலவை பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.

திட்டத்தை அறிமுகப் படுத்திப் பேசிய மத்திய அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் “தொடக்க நிலையில் திட்டச்  செலவு ரூ.3,437 கோடி. தேவை அடிப்படையிலான திட்டம் என்பதால் பயனாளிகள் அதிகரிக்க அதிகரிக்க  நிதி ஒதுக்கீடும் உயரும்” என்றார்.

– நிதி மேலாண்மை வல்லுனர் ரவிசங்கர்

சில ஆக்கபூர்வ தாக்கங்கள்

குடும்பத்தில்…

** பிள்ளைகளுக்கு சுமையாக இருக்கிறேனோ என்ற தாபம் முதியவர் மனதிலிருந்து மறையலாம்.

** ஆஸ்பத்திரி செலவு பற்றிய நினைப்பால் சிகிச்சை செய்து கொள்ளாமல் நோயுடன் பெரியோர் படும் வேதனை குறையலாம்.

** கணவன் / மனைவி இல்லாமல் ஒற்றையாக உள்ள பெரியோர் நோய்வாய்ப்பட்ட நிலையில், திட்டத்தால் மருத்துவ செவிலியர் கவனிப்பு கிடைக்கும் ஏற்பாடு உண்டு என்பதால் நிம்மதி.

** மூத்தோரை வைத்துப் பராமரிக்கும் தலைமுறையினரில் சிலர் சலித்துக் கொள்ளும் வாய்ப்பு குறையும். தனக்கு ஒரே மகள்; அவளை   சார்ந்து வாழும் என்னால் அவளுக்கு பாரம் என்ற ஆதங்கம்  மூதாட்டிக்கு இருக்கலாம்; திட்டத்தால் தாய், மகள் இருவருக்கும் மனசு லேசாகும்.

** நாளாவட்டத்தில் குடும்பத்திற்குள் பெரியோர் மீது சகஜமான பிரியம்  துளிர்க்கும்.

** குடும்பத்தில் மூன்று தலைமுறையினர் இருப்பார்கள்; அவர்கள் மத்தியில் சுமுக உறவு நீடிப்பதில் தடங்கல் இருக்காது.

ஊரில் …

** சமுதாயத் தொண்டில் இறுதி நாள் வரை ஈடுபட விரதம் பூண்டவருக்கு முதுமைக்கால ஆரோக்கிய பராமரிப்பு எப்படி ஆகுமோ என்ற கவலை இல்லாமல் போகிறது.

** துறவு வாழ்க்கை ஏற்றோருக்கும் அதே போல உளவியல் ஆதாயம் கிடைக்கிறது.

** முதியோர் இல்லம் என்ற முறை மெல்ல மெல்ல மங்கிப் போக பாதை தெரியலாம்.

** சிகிச்சை உத்தரவாதம் இருப்பதால் நற்பணியில் ஈடுபட்டிருக்கும் முதியவர் தடைப்படாமல் தொடர வாய்ப்பு அதிகம்.

** ஊரார் மத்தியில் மூத்தோர் சங்கடமில்லாமல் (அனாவசிய இரக்கம் காட்டுவோரால் தல குனியாமல்) நடமாட வாய்ப்பு அதிகமாகலாம்.

தொகுப்பில் உதவி: ரமாதேவி பிரசாத்,
ப்ரியா ராம்குமார், எஸ்.எஸ். மகாதேவன்.