பாரத சுதந்திரப் போர் என்பது 1857ல் மிகப் பரவலாக அறிந்த ஒன்று. அதற்கு முன்பாகவே ஆங்கிலேயர்களை எதிர்த்து, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மக்களை திரட்டி அகிம்சை வழியில் போராடியவர் தான் காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி.
ஆங்கிலேயர்கள் “வரி” என்ற பெயரில் செய்த அட்டூழியங்களை, “கல்வி” என்ற போர்வையில் செய்த மதமாற்றங்களை, அவர்கள் பாணியில் தகுந்த ஆதாரங்களுடன், பத்திரிகை ஆரம்பித்து அதன் மூலம் வெளிக் கொண்டு வந்தவர் தான் காஜுலு.
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு :
மதமாற்ற சீரழிவுகள் பற்றி மக்களிடையே எடுத்துரைத்து, அதனை பல வகையில் தடுத்து நிறுத்தியதில், முக்கியப் பங்கு வகித்தவர், காஜுலு. அவரது செயல்களால் ஊக்கமும் உற்சாகமும் அடைந்த இஸ்லாமியர்களும், கிறிஸ்தவ மத மாற்றத்தை தடுத்து நிறுத்தியதுடன் மதமாற்றம் செய்ய வந்த பாதிரியாரை அடித்து வெளியேற்றினார்கள் என்பது வரலாற்று உண்மை.
1846ம் ஆண்டு, கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி பச்சையப்பா கல்லூரி அருகே மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார், காஜுலு. பாடத்திட்டத்தில் பைபிளை சேர்க்க, ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினர். இத்தகையதொரு போராட்டத்தினால், அந்த திட்டம் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சமுதாய மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்த சமயத்தில், லண்டன் மிஷினரி பாதிரியார் ஓருவர் அங்கு உள்ள அம்மனை அவமரியாதை செய்ய முனைந்தார். இதனால் கோபம் கொண்டு கொதித்தெழுந்த மக்கள், அந்த பாதிரியாரை அடித்து உதைத்து, அவர் செய்த மதமாற்ற செயல்களுக்காக மண்டியிட்டு மன்னிப்பு பெற கட்டளையிட்டனர். மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என உறுதி அளித்த பின்னரே அவர் விடுக்கப்பட்டார்.
ராமநாதபுரம் சமஸ்தானத்தில் உள்ள கீழக்கரையில் இருந்த சுஃபி தர்காவிற்கு, அத்துமீறி நுழைய முயன்ற கிறிஸ்தவப் பாதிரியாரை, இஸ்லாமிய மக்கள் அடித்து உதைத்து, ஆடைகளை கிழித்து, உணவு வழங்காமல், குடிக்க தண்ணீர் கூட தராமல் சிறைப்படுத்தி, குரானை ஐந்து முறை ஓதக் கட்டளையிட்டனர். பின்னர் மகாராஜாவின் தலையீடின் பேரில், அவர் விடுவிக்கப்பட்டார். முழு கிராமத்தையுமே மதமாற்றம் செய்ய முயன்ற போது, அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டது.
இத்தகைய மக்கள் எழுச்சி, காஜுலுவின் செயலால் மட்டுமே சாத்தியமானது. இஸ்லாமியர்களும், மதமாற்ற செய்ய முயன்ற பாதிரியாரை எதிர்த்து, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இலங்கையிலும் இது போன்ற மதமாற்ற சம்பவம் நடந்தது. தனது “மெட்ராஸ் கிரெசன்ட்” இதழில், தொடர்ந்து மதமாற்ற அச்சுறுத்தல்களை எழுதி வந்ததால், மக்கள் எழுச்சி அடைந்து, இவ்வாறு திருப்பித் தாக்கினார்கள். இத்தகைய மதமாற்ற எதிர்ப்புக்கு காஜுலுவின் சமரசம் இல்லாத சமூகப் பணியே காரணம் என வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.
பத்திரிகைத் துறையின் தந்தை :
1840 ஆம் ஆண்டில், 60 இதழ்கள் நமது நாட்டில் இருந்த போதிலும், இந்தியர்களுக்கு என சொந்தமாக ஒரு அச்சகம் கூட கிடையாது. அப்படி ஒரு நிலையை மாற்றியவர், காஜுலு. சென்னையில் “இந்து” என்ற அச்சகம் துவக்கி அதன் மூலம் “மெட்ராஸ் கிரசென்ட்” என்னும் இதழை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என்று 3 மொழிகளில் வெளியிட்டு, ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளையும், பிரிட்டிஷார் நிகழ்த்திய கொடுமைகளையும் இந்திய மக்களுக்கு எடுத்து உரைத்ததில், முக்கியப் பங்கு வகித்தவர், காஜுலு. எந்த ஓரு இந்தியக் குடிமகனும், தனது தாய் மொழியில் பத்திரிகையை நடத்த ஆங்கிலேயர்கள் அனுமதி வழங்கவில்லை.
அத்தகைய மோசமான சூழ்நிலையை மாற்றி, புரட்சி ஏற்படுத்தியவர் காஜுலு. இதனால் அவரை “இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை” என அழைத்தாலும், அதற்கு பொருத்தமானவராகவே இருப்பார். அவரது பத்திரிகை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்டு இருந்தது. அதனுடைய தாக்கம், தமிழகம் மட்டுமல்லாது இலங்கையிலும் எதிரொலித்தது.
படிப்பறிவித்த காஜுலு :
கிறிஸ்தவ மதத்தை சாராதவர்களும், கட்டாயமாக பைபிள் படிக்க வேண்டும் என்ற விதியை எதிர்த்து 70,000 பேரிடம் கையெழுத்து பெற்று அதை தடுத்து நிறுத்தியவர், காஜுலு. பூர்வகுடி மக்களின் பிள்ளைகள், இந்து முறைப்படி கற்பதற்காகவே, சென்னை பிராட்வேயில் பள்ளிக்கூடத்தை திறந்தார். தமிழக மாணவர்களின் நலனுக்காக, பச்சையப்பா கல்லூரி நிறுவுவதில் முக்கியப் பங்கு வகித்தார். “மெக்காலே” கல்வி முறையைத் தாண்டி, நமது நாட்டு மக்கள் “நமது கல்வி” முறையை கற்க, இத்தகைய கல்விக் கூடங்கள் முக்கியப் பங்கு வகித்தன.
“ஆர்டர் ஆஃப் ஸ்டார் ஆஃப் கம்பெனியன் ஆஃப் இந்தியா” என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட காஜுலு, செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி 1868 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். சென்னையில் அமைந்து இருக்கும் பச்சையப்பா கல்லூரியில், அவரது நினைவாக அவரது உருவப்படம் உள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டு, கடுமையாக உழைத்து, மக்களை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்த காஜுலுவின் வரலாறு போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது. அவரது நினைவு நாளில் நாம் அஞ்சலி செலுத்துவோம்.
குறிப்பு : காஜுலு லக்ஷ்மிநரசு செட்டியின் முழு வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழியில் வெளிவந்து உள்ளது. தேவைப்படுபவர்கள் 84382 53635 – சதீஷ் என்பவரின் எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.