சனாதன தர்மம் பற்றி பேச்சு: உதயநிதிக்கு கோர்ட் கண்டிப்பு

 

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகனான தமிழக அமைச்சர் உதயநிதி கடந்தாண்டு பேசினார். இது தொடர்பாக, அவருக்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற அமர்வு, அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு கூறியுள்ளதாவது:

சனாதன தர்மம் தொடர்பாக, நீங்கள் சுயமாக தெரிந்தே கருத்து தெரிவித்துள்ளீர்கள்.
ஊடகவியலாளர்கள் அர்னாப் கோஸ்வாமி, முகமது ஜுபைர் போன்றோருக்கு எதிரான வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரித்தது போல், இந்த வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க எப்படி நீங்கள் கோர முடியும்?

ஊடகங்கள், தங்களுடைய பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூறியபடி கருத்து தெரிவிக்கின்றன. பா.ஜ.,வைச் சேர்ந்த நுாபுர் சர்மா குறித்து கூறியுள்ளீர்கள். அவர் முழு நேர அரசியல்வாதி. ஆனால், நீங்கள் அரசியல்வாதி மட்டுமல்ல; அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, அமைச்சராகவும் உள்ளவர்.

அரசியலமைப்பு சட்டத்தின், 32வது பிரிவின் கீழ், அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் உரிமையின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எப்படி அந்தப் பிரிவின் கீழ் வரும்? குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 406வது பிரிவின்படி, வழக்குகளை மாற்றிக் கொள்ளும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தும்படி கோரியிருக்க வேண்டும். அதனால், மனுவை திருத்தி தாக்கல் செய்யவும். வரும் மே 6ம் தேதிக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.