சனாதன எதிர்ப்பை காங். கண்டிக்கவில்லை

கூட்டணி கட்சி சனாதன எதிர்ப்பு குறித்து பேசும்போது அதனை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை என்று அக்கட்சியிலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதன் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் தெரிவித்தார். இதுகுறித்து அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் சனாதன தர்மத்துக்கு எதிராக பேசிய போது காங்கிரஸ் கட்சி அதனை கண்டிக்காமல் மவுனம் காத்தது. திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டிருக்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துகளை கூறவோ, நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்பவர்கள் குறித்து அவதூறுகளை பேசவோ என்னால் இயலாது.
காங்கிரஸ் கட்சி அதன் அடிப்படை கோட்பாடுகளில் இருந்து விலகி தவறான இலக்கை நோக்கிசெல்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும் காங்கிரஸ்மறுபக்கம் இந்து சமூகத்தை எதிர்க்கிறது. இது, மக்கள் மத்தியில் காங்கிரஸ் குறித்து தவறான பார்வையை விதைக்கிறது. காங்கிரஸ் ஒரு மதத்தை மட்டுமே ஆதரிக்கிறது என்கிற பிம்பத்தை மக்களுக்கு கடத்துகிறது. இது, காங்கிரஸின் அடிப்படை கொள்கைக்கே எதிரானது.
காங்கிரஸின் பொருளாதார கொள்கைகள் அனைத்துமே தேசத்துக்கான வளத்தை சேர்ப்பவர்களுக்கு எதிரானதாகவே உள்ளன. தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கல் பொருளாதார கொள்கைகளை நோக்கி நகர்ந்து வரும் நம் தேசத்தில் தொழில் செய்து பணம் ஈட்டுவது பெரிய தவறு போல் சித்தரிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது எனது திறமையை பொருளாதார விவகாரங்களின் மீதும், நாட்டு நலன் சார்ந்தும் செலுத்த வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் பொருளாதார பார்வைகொண்ட ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கலாம். ஆனால், எனது கருத்து கட்சியில் எடுபடவில்லை. பொருளாதார விவகாரங்களில் காங்கிரஸின் நிலைப்பாடு என்னைப் போன்றவர்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது.
நான் காங்கிரஸில் இணைந்தபோது இளைஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அவர்களது யோசனைகளை மதிக்கும் நாட்டின் பழமையான கட்சி என்று நம்பினேன். ஆனால் அது பொய்த்துவிட்டது. இளைஞர்களிடம் புதிய சிந்தனைகள் உள்ளன. ஆனால், களயதார்த்த நிலையிலிருந்து காங்கிரஸ் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே, அதனால் ஆட்சிக்கு வரமுடியாது. அதேபோல் வலுவான எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் செயல்பட முடியாது.
அயோத்திர ராமர் கோயில் திறப்பின்போது காங்கிரஸ் எடுத்த முடிவு என்னைப்போன்றவர்களை வருத்தமடைய செய்தது. இவ்வாறு வல்லப் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கவுரவ் வல்லப் டெல்லியில் பாஜக பொதுச் செயலர் வினோத் தாவ்டே முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார்.