ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, விஜயசிங் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காயாமொழியில் சோமசுந்தரம் – பாலாவர்ணம் தம்பதியினரின் மகனாக 1944ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி பிறந்தவர் விஜயசிங்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை சொந்த ஊரான காயாமொழியிலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இடையன்குடியிலும், தூத்துக்குடி நாசரேத் மார்காசிஸ் பள்ளி, பளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பி.யூ.சி.யும், பி.ஏ. பட்டப்படிப்பை தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியிலும் பயின்றார்.
1970ம் ஆண்டு சங்கப் பிரச்சாரக் பாஸ்காரராவ்ஜி மூலமாக சங்கத்துக்கு அறிமுகம். நங்கைமொழி நடராஜன் மூலமாக வீட்டில் வந்து சந்தித்தார்.
காயாமொழியைச் சேர்ந்த எஸ்.எஸ்.
ஆதித்தன், ராமகிருஷ்ணன் ஆகியோர் மூலம் ஷாகாவுக்கு சென்றார். அவரது குடும்பத்தில் பெரியப்பா மகன் டாக்டருக்கு படிக்கும் போது, உடன் பயின்ற கிறிஸ்தவப் பெண்மணியை காதலித்து மணந்ததன் மூலம் அவர் கிறிஸ்தவரானார்.
அதனால், அவரது அம்மாவின் மரணத்தின் போது கொள்ளிபோட மறுத்துவிட்டார். அதன்பின் விஜயசிங் கொள்ளி போட்டார். அதன் காரணமாக மதமாற்றத்தை தீவிரமாக எதிர்த்தார்.
தொடக்கத்தில் நாத்தீக சிந்தனையோடு இருந்த அவர், பின்னர் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தொடர்ந்து கிராமங்களில் உள்ள ஆலயங்களில் பஜனை, பாவை வழிபாடு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தினார்.
இவரது தீவிரத்திற்கு அணைபோடும் விதமாக இவரது உறவினர் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை திருமணத்திற்கு பேசி முடித்து, ரொக்கம் கை மாறியது. அந்த தருணத்தில் பெண் கிறிஸ்தவர் என்பதை தெரிந்து அத்திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.
அவரது அம்மா எவ்வளவோ சமாதானம் கூறியும், திருமணத்தை நிறுத்தினார். இதனால் ஹிந்து அமைப்புகளோடு அவருக்கு தீவிரமான ஈடுபாடு ஏற்பட்டது.
கிறிஸ்தவராக மதம் மாறிய இவரது அண்ணா, தனது ஊரில் ஒரு சர்ச் கட்ட முயன்ற போது, ஒட்டுமொத்த ஊரின் எதிர்ப்போடு சர்ச் கட்ட திட்டமிட்ட இடத்தில், ஒரு பிள்ளையார் கோயில் எழுந்தது. அதன் பின்னணியில் இருந்தவர் விஜயசிங் ஜி. அது தற்போதும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலாக உள்ளது.
தொடர்ந்து ஹிந்து இயக்கங்களோடு தீவிர தொடர்பு காரணமாக, முதலாம் ஆண்டு
ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை கரூரிலும், இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாமை தாம்பரத்திலும், 1992ம் ஆண்டில் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாமை நாகபுரியிலும் முடித்தார்.
தொடக்கத்தில் திருச்செந்தூர் தாலுகாவின் பெளதிக் பிரமுக், தாலுகா கார்யவாஹ், ஜில்லா சேவா பிரமுக் உள்ளிட்ட பல பொறுப்புக்களில் சங்கப்பணியாற்றியுள்ளார்.
கேசவ விநாயகம் ஜி, ராம.ராஜசேகர் ஜி, கிருஷ்ண ெஜகன்நாதன் ஜி ஆகியோர் சங்கப் பிரச்சாரக்காக இருந்த காலத்தில் சங்க வேலையில் தீவிரமாக செயல்பட்டார். 1992ல் சம்ஸ்கார் பாரதியின் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கலெக்ஷன் கிளர்க்காக பணியில் இணைந்து, பணி ஓய்வு வரை அங்கேயே பணிபுரிந்தார். கோயிலில் ஏற்படும் முறைகேடுகளை தட்டிக் கேட்டதுடன், நேர்மையாக நடந்து கொண்டதால் பல பிரச்சினைகளை சந்தித்தபோதும், தளராது தனது நிலையில் உறுதியாக இருந்தார்.
சம்ஸ்கார் பாரதியில் தீவிரமாக ஈடுபட்டு, டாக்டர் ஜி நூற்றாண்டு காலத்தில் கேசவர் முத்தமிழ் மன்றம் துவக்கி நிறைய இசைக் கச்சேரிகளை தேசபக்தி பாடல்களுடன் நடத்தி வந்தார். டாக்டர் ஜி பற்றி வில்லுப்பாட்டு ஒன்றையும் எழுதி பாடி வந்தார்.
1974ல் தூத்துக்குடியில் உள்ள உறவினர் மகளை மணந்தார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி வசந்தா, சேவிகா சமிதி கார்யகர்த்தராக மாவட்டப் பொறுப்பில் செயல்பட்டார்.
மூன்று பெண் குழந்தைகளும் சேவிகா சமிதியில் பயிற்சி பெற்றுள்ளனர். பணி ஒய்வுக்குப் பின் 10 வருடங்கள் சென்னை வண்ணாரப்பேட்டையில் சம்ஸ்கார் பாரதி மற்றும் ஷாகா ஆகியவற்றை சேர்த்து கவனித்து வந்தார்.
சங்கப் பணியின் போது இவரது வீட்டிற்கு பாஸ்கர்ராவ் ஜி, ஹிந்து முன்னணியின் மாநிலத் தலைவர் தாணுலிங்க நாடார் ஜி, ராமகோபாலன் ஜி, சண்முகநாதன் ஜி, வன்னியராஜன் ஜி உள்ளிட்ட பல்வேறு சங்கப் பிரமுகர்கள் வந்துள்ளனர்.
திருச்செந்தூரில் சங்கப் பொறுப்பில் இருந்தபோது, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொறுப்பிலிருந்த தத்தோபந்த் தெங்கடி ஜி இவரது வீட்டிற்கு வந்திருந்தார். ராஷ்ட்ரீய சேவா பாரதியின் சுந்தர.லட்சுமணன் ஜி, இல.கணேசன் ஜி, ஸ்ரீகணேசன் ஜி உள்ளிட்ட அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.
சம்ஸ்கார் பாரதி மாநில பொறுப்பிலிருந்த போது, அகில பாரத தலைவரான யோகேந்திரா ஜியின் அமிர்தோத்ஷவ விழாவை சென்னையில் ஏற்பாடு செய்து, அதில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
சுப்பாராவ் ஜி வழிகாட்டுதலின்படி அந்த விழா சிறப்பாக நடைபெற்றது. சம்ஸ்கார் பாரதியின் வேலைக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சிறப்பாக செயல்பட்டார்.
தற்போது குழந்தைகள் மூவருடைய திருமணத்திற்குப் பின், சொந்த ஊரான காயாமொழியில் வசித்து வருகிறார். சங்க நூற்றாண்டு விழா தருணத்தில், டாக்டர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை வெண்பா வடிவில் பாடலாக்கி எழுதி வருகிறார்.
இதுவரை 200 பாடல்கள் முடிவு பெற்றுள்ளன. மீதமுள்ளவற்றை இந்த வருடத்திற்குள் எழுதி வெளியிட உள்ளார். தற்போது டியூசன் சென்டர், கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டர், கேசவர் முத்தமிழ் மன்றம் மற்றும் மும்பை AMICARE Foundation நிறுவனத்துடன் இணைந்து சேவா மனப்பான்மையுடன் செய்து வருகிறார்.
இப்போதும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஊரில் நடத்தி வருகிறார். தற்போது ஒரு சர்ச் கட்டுவதற்கான முயற்சி தீவிரமாக நடந்து வருவதை அறிந்து ஊர் மக்களுடன் சேர்ந்து நிறுத்தியுள்ளார். இப்போதும் 82 வயதில் சம்ஸ்கார் பாரதியின் மாநில துணை தலைவராக உள்ளார். ஷாகாவும் நடத்தி வருகிறார் விஜயசிங் ஜி, தற்போதைய கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.