சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட ராமரத்தினம் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி,  75 ஆண்டுகளுக்கும்  மேலாக ஸ்வயம்சேவக்காக இருந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் ராமரத்தினம் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்….

 

செப்டம்பர் 12, 1938ல், திருச்சி அருகே உள்ள அன்பில் கிராமத்தில், கிருஷ்ணசாமி — லட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் ராமரத்தினம். இவருக்கு ராஜகோபால் என்ற அண்ணனும், செல்லம்மாள், சரோஜா, சகுந்தலா, சுலோச்சனா என்ற நான்கு சகோதரிகளும் இருந்தனர்.

1950ல், ஆறாவது வகுப்பு படிக்கும் போது இவருடைய அண்ணன் ராஜகோபால், தஞ்சாவூர் சங்கர மடத்தில் நடந்த மூன்று நாள் ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு முக்கிய சிக்ஷக்காக இருந்தார். அந்த முகாமிற்கு குறைந்த வயது காரணமாக ராமரத்தினம் ஜிக்கு  அனுமதி மறுக்கப்பட்டதால்,  த்வஜ ஸ்தம்பம் (கொடி கம்பம்) எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தினமும் ஷாகா சென்று வந்த அவருக்கு,  ஐராவதம் மகாதேவன் ஜி,  இல. நாராயணன் ஜி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர்  இவரது அண்ணன் ராஜகோபால், நெய்வேலியில் ஜில்லா கார்யவாஹ்காக சங்க வேலை செய்தார்.

ராமரத்தினம் ஜி, பத்தாம் வகுப்பு வரை தஞ்சாவூரில் உள்ள வீரராகவன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் பி.யூ.சி. படிப்பை திருச்சியில் உள்ள ஜமால் கல்லூரியில் பயின்றார். பி.எஸ்.சி படிப்பை தஞ்சாவூரில் உள்ள சரபோஜி கல்லூரியிலும், எம்.எஸ்.சி படிப்பை தரங்கம்பாடி கல்லூரியிலும், பி.எட் படிப்பை திருபராய்த்துறையிலும் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் எம்.எட் படிப்பைப் படித்துத் தேர்ச்சி பெற்றார்.

1959ல், திருச்சியில் உள்ள பாப்பம்மாள் சத்திரத்தில் நடந்த முதலாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்கவில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார். அப்போது அந்த வர்க ஓ.டி.சி (Officers Training Camp) என அழைக்கப்பட்டது,  முப்பது நாட்கள் வர்க இருந்தது. அந்த காலத்தில், தமிழகம்- – கேரளா ஓரே ப்ராந்தமாக இருந்தது. தமிழகத்தில் இருந்து 50 பேரும், கேரளாவில் இருந்து 110 பேரும் அந்த வர்கவில் கலந்து கொண்டனர். குருஜி,  தீனதயாள்ஜி,  நானாஜி,  பாய் மகாவீர் ஜி போன்ற சங்கத்தின் மூத்த அதிகாரிகள் அந்த வர்கவில் தலா மூன்று நாட்கள் தங்கி இருந்து பௌத்திக் (உரை) ஆற்றினார்கள்.

1968ல், இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாமை, மதுரையில் முடித்தார். அப்போதும் தமிழகம் – கேரளா ஒரே ப்ராந்தமாக இருந்தது. அதில் 200 பேர் கலந்து கொண்டனர். அந்த வர்கவிற்கு வந்திருந்த குருஜி,  ராமரத்தினம் ஜியிடம் முதலாம் வர்க முடித்து ஒன்பது வருடம் கழித்து இரண்டாம் வர்க முடித்துள்ளீர்கள்,  மூன்றாவது ஆண்டு வர்கவை எப்போது முடிக்கப் போகிறீர்கள்? என கேட்டது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. அவருடைய பெயரை ஞாபகம் வைத்தது மட்டுமல்லாமல், வர்க முடித்த வருடத்தையும் குருஜி ஞாபகம் வைத்திருக்கிறாரே என ஆச்சரியப்பட்டார்,  ராமரத்தினம் ஜி.

அதனால், மூன்றாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்காவை சீக்கிரமே முடித்து விட வேண்டும் என எண்ணி, தன்னுடைய மற்றப் பணிகளை அதற்கேற்றார் போல திட்டமிட்டு,  1970ம் ஆண்டு நாக்பூரில் மூன்றாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்கவை முடித்தார். தமிழகத்தில் இருந்து அந்த வர்கவில் 14 பேர் கலந்து கொண்டனர். அகில பாரத அளவில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இயற்பியலில் எம்.எஸ்.சி, எம்.எட் பட்டம் பெற்ற ராமரத்தினம் ஜி,  தஞ்சாவூரில் தான் படித்த வீரராகவன் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் பாடத்தில்  11, 12ம் வகுப்பிற்கு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

1965 முதல் 1985 வரை என தொடர்ந்து இருபது ஆண்டுகள்,  தஞ்சாவூர் ஜில்லா ஆர்.எஸ்.எஸ் கார்யவாஹ்காக சங்க வேலை செய்தார். 1975-78ம் ஆண்டு காலத்தில், அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதால், 18 மாதம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் திறமையை அறிந்த அப்பள்ளி,  சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், ராமரத்தினம் ஜிக்கு மீண்டும் வேலை கொடுத்தது.

1962ல், தனது மாமன் மகளான கண்ணம்மாளை திருமணம் செய்தார். எமர்ஜென்சியின் போது அவரது இரண்டு மகன்கள் உயிரிழந்தனர். பின்னர் ராஜ்குமார் என்ற மகன் பிறந்தார். தற்போது அவர் இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

ப்ராந்தப் பிரச்சாரக்காக இருந்த சண்முகநாதன் ஜி,  இல.கணேசன் ஜி இவரது மாணவர்கள். அவர்களுக்கு பாடத்தையும் நடத்தி, சங்கத்தையும் புரிய வைத்து, சங்கத்திற்கு அழைத்து வந்தார்.  பல்வேறு கடினமான சூழ்நிலைகள் சுற்றி இருந்த போதிலும், தொடர்ந்து சங்கப் பணி செய்து கிசான் சங்கத்தில் இருக்கும் கணேசன் ஜி,  இந்து முன்னணியில் உள்ள முருகானந்தம் ஜி போன்றவர்களை சங்கப் பணி செய்ய ஊக்குவித்தார்.

இவரது வீட்டிற்கு கோவிந்தன் ஜி, தனுசு ஜி, சுப்பாராவ் ஜி, தினகர் ஜி, சண்முகநாதன் ஜி, சூரி ஜி, ராமகோபாலன் ஜி, யாதவராவ் ஜோஷி ஜி என சங்கத்தின் பல மூத்த ப்ரச்சாரக்குகள் வருகை புரிந்து உணவருந்தி உள்ளனர்.

1985  முதல் ஆசிரியர்களுக்கான அமைப்பான  ஏ.பி.ஆர்.எஸ்.எம்.மில் அமைப்புச் செயலாளராக இருந்தார். மாற்றுச் சிந்தனைகள் பரவி இருந்த காலத்தில், தேசியம் மற்றும் தெய்வீக சிந்தனைகளை ஆசிரியர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தொடர்ந்து நாற்பது வருடங்கள் அரும்பாடுபட்டார். தற்போது அந்த அமைப்பின்  ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.   87 வயதிலும் உற்சாகமாக சங்க வேலை செய்து வரும் ராமரத்தினம் ஜி,  சங்க கார்யகர்த்தர்களுக்கு வாழும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.