இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் நாட்டு பசுக்களின் மூலம் கிடைக்கும் பஞ்ச கவ்யத்தின் மூலம் மண்வளத்தை அதிகரிக்கவும் கிராமப்புற மக்களின் பொருளாதார வாழ்வு மேம்படவும் மக்களின் ஆரோக்கியம் வாழ்வு செழிக்கவும் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆன்மிக உணர்வுடன் நடத்தப்படும் கோமாதா பூஜையும் அதில் ஒன்று. கோமாதாவிற்கு, பூஜை செய்வது நம்நாட்டு பாரம்பரிய வழக்கம்.
கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கோ ஜெப யக்ஞம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு ஜெப வேள்வியை செய்தனர்.
அவ்வகையில் கோவை குனியமுத்தூரில் 108 நாட்டுப்பசுக்களை கொண்டு கோமாதா பூஜை நிகழ்ச்சி கோ சேவா சமிதியின் சார்பில் ஏப்ரல் 15, அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலாவதாக உலக மக்களின் நன்மைக்காக பிரமாண்டமான மஹா யாகம் நடைபெற்றது, அதையொட்டி சாது சன்யாசிகள், இயற்கை ஆர்வலர்கள் கலந்துகொண்ட ஆன்றோர் சபை கூட்டம் துவங்கியது, இக்கூட்டத்திற்கு கோ சேவா சமிதியின் மாநிலத் தலைவர் மு. உதயகுமார் தலைமை தாங்கினார். பேரூர் ஆதீனம் இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கன்னியாகுமரி வெள்ளிமலை ஆசிரம தலைவர் பூஜனீய சைதன்யாநந்த மகராஜ் சுவாமிகள் சிறப்புரையாற்றினார். ஏராளமான மடாதிபதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு தங்கள் கரங்களாலேயே 108 நாட்டுப்பசுக்களுக்கு கோமாதா பூஜை செய்தனர். இந்த கோமாதா பூஜையில் 3,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 10,000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.