கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து  டாக்டர்கள் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது தொப்பி அல்லது குடை, கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, பழையசாதத்தில் நீர் சேர்த்த கஞ்சி, கம்பு கேழ்வரகு கூழ், பழச்சாறு, இளநீர், தர்பூசணி ஆகியவற்றை அருந்த வேண்டும்.

குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்ப தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். வீட்டில் பகல் நேரங்களில் திரைச்சீலைகள், கூடாரங்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தும் அறைகளை காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்குமாறும் அமைத்துக்கொள்ள வேண்டும்

சுட்டெரிக்கும் வெயிலில்  பணிசெய்யும் கட்டிட தொழிலாளர்கள் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும். கடும் வெயில் நேரத்தில் (மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை) சூரிய ஒளியின் நேரடி தாக்கம் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும். மதிய நேரத்தில் சமைப்பதை தவிர்க்கவும். அடர் வண்ணம் கொண்ட (குறிப்பாக கருமை வண்ண) ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வெயிலில் கடுமையான பணிகளை செய்யக்கூடாது. உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீர் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக்கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழவகைகளை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.