வட சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி (27.3.24) திருவொற்றியூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக கொளத்தூர் தொகுதி கவுதமபுரத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், மேயர் ஆர்.பிரியா முன்னிலையில், வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் திமுகவின் சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை அம்சங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வாக்காளர்களிடம் விநியோகித்தனர். மேயர் பிரியா, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியின்போது அங்கு கூடிய பெண்கள் திமுகவினரைப் பார்த்து, “இப்போ எதுக்கு வந்தீங்க? கட்சி சார்பில் நிவாரணம் பெறத் தகுதி இல்லாத எங்களின் வாக்குகள் உங்களுக்கு எதற்கு” எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி திடீரென பரபரப்பானது.
இது தொடர்பாக அந்த பெண்கள் கூறியதாவது: இந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் 840 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது வெளியே செல்ல முடியாமல் அனைவரும் பாதிக்கப்பட்டோம். அப்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி கட்சி சார்பில் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். எங்களுக்கு ஏன் வழங்கவில்லை என கட்சிக்காரர்களிடம் கேட்டால், ‘கட்சிக் கொடி பிடித்தாயா, கோஷம் போட்டாயா, ஊர்வலம் வந்தாயா, உங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் நிவாரணம்’ என்று ஏகவசனம் பேசினர்.
அப்படி கட்சி நிவாரணம் பெறக்கூட தகுதி இல்லாத எங்களிடம் ஏன் வாக்கு கேட்டு வந்தீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் கஷ்டப்படும்போதெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் வாக்கு சேகரிக்க வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். சிறிது நேரத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் வேட்பாளர் கலாநிதி ஆகியோரை வழியனுப்பிய திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.