ரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மனிதர்களுக்கு பரிசோதிக்கும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன. ஆனால், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும், அனைத்துக்கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்திருந்தது. மேலும், விரைவில் மருந்தை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில், தடுப்பு மருந்து குறித்து ரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் வீடியோ கான்பரென்சிங் மூலம் அந்நாட்டு அதிபர் புடின் பேசினார்.
உலகில் முதன்முறையாக, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கி இன்று காலை, பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது இரு மகள்களில் ஒருவர் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார். தற்போது நலமாக உள்ளார். கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பரிசோதனையில் அவர் ஈடுபட்டார் என்று சொல்லலாம். இந்த புதிய தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்ததும் மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.