அண்மையில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான பொது சுகாதாரத் தயார்நிலை மற்றும் தேசிய கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் முன்னிலையில் மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் உரையாடிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். வரும் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஒத்திகை நடத்தவும், ஏப்ரல் 8,9 ஆகிய தேதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சுகாதாரத் தயார் நிலை குறித்து ஆலோசிக்குமாறும் மாநில சுகாதார அமைச்சர்களை வலியுறுத்தினார். 2023 ஏப்ரல் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தற்போதுள்ள 10 லட்சத்துக்கு 100 சோதனைகள் என்ற விகிதத்தில் இருந்து சோதனை விகிதத்தை விரைவாக அதிகரிக்கவும் ஆர்.டி பி.சி.ஆர் சோதனைகளை அதிகரிக்கவும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முதல் 2 டோஸ் தடுப்பூசி போடுவதில் 90 சதவீதம் நிறைவு செய்திருந்தாலும், முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்துவது மிகவும் குறைவாக உள்ளது என்றும் அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போடுவதை அதிகரிக்குமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், புதுவை முதல்வர் என். ரங்கசாமி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.