கைலாஸாவின் ஆன்மிகத் தூதரகம்

பல்வேறு சர்ச்சைகள் எழுந்த்தையடுத்து திடீரென தலைமறைவான சுவாமி நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை வாங்கி ‘கைலாஸா’ என்ற நாட்டையே உருவாக்கிவிட்டார். இரண்டு நாட்களுக்கு முன், கைலாசாவை இயையாண்மை பெற்ற ஒரு நாடாக அமெரிக்காவின் நிவார்க் நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டது. கைலாசாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டது. இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில், ‘கைலாஸா திருவண்ணாமலை’ என புதிதாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறிவிப்பு பேனரில் ‘பரமஹம்ச நித்யானந்தரின் அவதார ஸ்தலம் – கைலாஸா ஆன்மிக தூதரகம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உள்ளே நித்யானந்தாவுக்கு ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளதுடன் குருகுலம், கோசாலை, தியான சிகிச்சை மையம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் பௌர்ணமி தினத்தில், கைலாஸாவிலிருந்து ஆன்லைன் மூலம் திருவண்ணாமலை ஆசிரம குருகுலத்தில் நித்யானந்தா ஆன்மிக வகுப்பு எடுக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.