ஜார்க்கண்டில் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஹேமந்த் சோரன், நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ராஞ்சியில் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் நீதிமன்றக் காவலில், ராஞ்சி யில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹேமந்த் சோரனைப் போலவே டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையினரின் சம்மன்களை புறக்கணித்து வருகிறார்.
டில்லி மதுபான கொள்கை வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி, கடந்த நான்கு மாதங்களில் நான்கு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், சட்ட விரோதமாக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதற்கிடையே, பிப்., 2ம் தேதியான இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத் துறையினர் சமீபத்தில் ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பினர்.
இதன்படி, டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ., – ராஜ்யசபா எம்.பி., ஹர்நாத் சிங் யாதவ் நேற்று கூறுகையில், ”ஹேமந்த் சோரன் மீதான அமலாக்கத் துறையின் நடவடிக்கை முற்றிலும் சரியானது. அடுத்து சிக்கப் போவது கெஜ்ரிவால் தான்,” என்றார்.