கேரளாவில் களைகட்டிய மஞ்சு விரட்டு: பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்

கேரளா மாநிலம் மூணாறு அருகே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சு விரட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தமிழர்கள் பல தலைமுறையாக வசித்து வருகின்றனர். கேரளாவைப் பொறுத்தளவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் அம்மாநில பாரம்பரியப்படி படகுப்போட்டி, கதகளி, களரி மோகினியாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.

இந்நிலையில் தமிழர்கள் தங்கள் பகுதியில் தங்களின் பூர்வீக நிகழ்வுகளை முக்கிய தினங்களில் கொண்டாடி வருகின்றனர். இதன்படி தமிழக கேரள எல்லையான மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காளைகளின் கொம்புகளை அலங்கரித்து ஒவ்வொன்றாக திடலுக்குள் அனுப்பினர். பலரும் காளைகளை தழுவி கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசு டோக்கன்களை எடுக்க முயன்றனர்.

இந்த முயற்சியில் சிலர் வெற்றியும், தோல்வியும் அடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர்.தொடர்ந்து ஒவ்வொரு காளையாக திடலுக்குள் அனுப்பப்பட்டது. வீடுகளின் மேல்தளத்தில் இருந்து ஏராளமானோர் இதனை கண்டு ரசித்தனர்.வட்டவடை மட்டுமல்லாது கோவிலூர், கோட்டாகம்பூர் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த தமிழர்கள் கூறுகையில், “பல தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் இதுபோன்ற பூர்வீக வீரவிளையாட்டு, வழிபாடு, திருவிழாக்களையும் கொண்டாடி வருகிறோம். கேரளாமாநிலத்தில் இங்கு மட்டுமே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது. இதனால் அருகில் உள்ள தமிழர்கள் பலரும் இதை காண ஆர்வமுடன் வருகிறார்கள்” என்றனர்.