குருதேஜ்பகதூரின் தியாகம் பாரதத்தையே உலுக்கியது. அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும். இதை யாரும் பறிக்கக்கூடாது. மற்றவர்களின் உரிமையில் வேறு யாரும் தலையிடக் கூடாது என்ற குருதேஜ்பகதூரின் நற்செய்தி 350 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கலங்கரை விளக்கமாக மிளிர்கிறது.
குருநானக் சீக்கியர்களின் முதலாவது குரு ஆவார். 2வது குரு அங்கத்தேவ், 3வது குரு அமர்தாஸ், 4வது குரு ராம்தாஸ், 5வது குரு அர்ஜன்தேவ், ஆறாவது குரு ஹர்கோவிந்த் சிங், 7வது குரு ஹர்ராய், 8வது குரு ஹர்கிருஷ்ணன், 9வது குரு தேஜ்பகதூர், 10வது குரு கோவிந்த் சிங்.
1621ம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் அமிர்தசரஸில் தேஜ்பகதூர் பிறந்தார். அவர் பன்மைத் தன்மைக்காக தொடர்ந்து பாடுபட்டார். ஒற்றைத் தன்மை திணிக்கப்படுவதை எதிர்த்து சமர் புரிந்தார்.
17ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஒளரங்கசீப், சன்னி பழமைவாதத்தை திணித்தார். ஜிஸ்யா வரி கட்டாத ஹிந்துக்களை படுகொலை செய்தார். ஷியா, போக்ரா பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்களையும் ஒளரங்கசீப் துன்புறுத்தினார். அவருக்கு அரசியல் அதிகாரம் மட்டுமே இலக்கு. தனது சகோதரர்களை கொன்று குவித்து, அதிகாரத்தை கைப்பற்றியவர்தான் ஒளரங்கசீப்.
1669ல் காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒளரங்கசீப் சேதப்படுத்தினார். 1670ல் மதுராவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி ஆலயத்தை தரைமட்டமாக்கினார். அதுமட்டுல்லாமல் அயோத்தி, முல்டான், விதிஷா, உஜ்ஜயின், நாசிக், பிருந்தாவன் உள்ளிட்ட புனிதத் தலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்தினார்.
அடுத்தபடியாக ஒளரங்கசீப்பின் பார்வை காஷ்மீர் மீது படிந்தது. காஷ்மீர் பண்டிட்டுகள் சனாதன தர்மத்தின் பாதுகாவலர்களாக விளங்கினார்கள். அவர்கள் இஸ்லாமைத் தழுவ வேண்டும், இல்லாவிட்டால் இறப்பைத் தழுவ வேண்டும் என்று ஒளரங்கசீப் இறுமாப்புடன் கூறினார்.
பண்டிட் கிருபா ராம் தலைமையில் ஏராளமான காஷ்மீர் பண்டிட்டுகள் குரு தேஜ்பகதூரைச் சந்தித்துப் பேசினார்கள். ஒளரங்கசீப்பின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்குமாறு அவரை கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வின்போது தேஜ்பகதூரின் மகன் கோவிந்த் சிங்கும் உடனிருந்தார்.
“குரு தேஜ்பகதூரை இஸ்லாமுக்கு மாற்றினால் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்லாமுக்கு மாறி விடுவார்கள். எனவே அவரை முதலில் இஸ்லாமுக்கு மாற்றுங்கள் என்று ஒளரங்கசீப்பிடம் கூறுங்கள்’’ என கிருபா ராமிடம் கோவிந்த் சிங் கூறினார்.
இத்தகவல் ஒளரங்கசீப்பிற்கு தெரிவிக்கப்பட்டது. குரு தேஜ்பகதூர் எப்படிப்பட்டவர் என்பதை ஒளரங்கசீப் புரிந்து கொள்ளவில்லை. கடவுள் ஒருவரே. மனித நேயமும் ஒன்றே என்பதில் ஆழ்ந்த பற்றுடையவர் குரு தேஜ்பகதூர்.
1604ல் குரு அர்ஜன்தேவ், குரு கிரந்தசாகிப்பைத் தொகுத்தார். இஸ்லாமிய வெறியன் ஜஹாங்கீர், குருகிரந்தசாகிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். ஆனால் குரு அர்ஜன்தாஸ் இதை ஏற்க மறுத்துவிட்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
1606ல் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அர்ஜன்தாஸின் தியாகம் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. இதையொட்டி ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
எல்லாமே ஒன்றுதான் வேற்றுமைகள் மேலோட்டமானவை. இதை புரிந்து கொள்ளாததால்தான் பிளவுகள் ஏற்படுகின்றன என்பதை குருதேஜ்பகதூர் தொடர்ந்து எடுத்துரைத்து வந்தார்.
ஒளரங்கசீப் பாரதத்தின் பண்பாட்டை நிர்மூலமாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். ஆனால் குருதேஜ்பகதூர் இதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
1675ம் ஆண்டு ஜூலை மாதம் அரந்தப்பூர் சாஹிப்பிலிருந்து டெல்லிக்கு குருதேஜ்பகதூர் புறப்பட்டார். அவருடன் அவரது சீடர்கள் பாய் மதிதாஸ், பாய் தயாள்தாஸ், பாய் சதிதாஸ் ஆகியோரும் சென்றனர். வழியிலேயே நால்வரையும் ஒளரங்கசீப்பின் படையினர் கைது செய்தனர். இஸ்லாமை ஏற்றுக் கொள்.
இல்லாவிட்டால் இறப்பு நிச்சயம் என்று ஒளரங்கசீப் கட்டளையிட்டார். நவம்பர் மாதம் பாய் மதிதாஸ் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டார். பாய் தயாள்தாஸ் உடலை வேக வைத்து உருக்குலைத்தனர். பாய் சதிதாஸ் எரித்துக் கொல்லப்பட்டார். எல்லாவற்றையும் குருதேஜ்பகதூர் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
குருதேஜ்பகதூரைக் கொல்லவும் ஒளரங்கசீப் உத்தரவிட்டார். வானத்தில் மேகங்கள் இருண்டன. குருதேஜ்பகதூரின் தலை துண்டிக்கப்பட்டது. ரத்தம் பாய்ந்தது. வானத்தில் இடி முழங்கியது. குருதேஜ்பகதூரை சொர்க்கமே அழைத்துக் கொண்டது என்பதை பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்வு இருந்தது.
குருதேஜ்பகதூரின் தலை பொதியப்பட்டு கிரத்பூர் சாஹிப்புக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைப்போல குருதேஜ்பகதூரின் உடல் டெல்லி ரெய்சினாவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டையே கொளுத்தி தகனக் கிரியை செய்தார்கள்.
இப்போது இந்த இடத்தில்தான் குருத்வாரா, ரஹப்கஞ்ச் சாஹிப் உள்ளது. குருதேஜ்பகதூரின் தியாகம் பாரதத்தையே உலுக்கியது. அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும். இதை யாரும் பறிக்கக்கூடாது. மற்றவர்களின் உரிமையில் வேறு யாரும் தலையிடக் கூடாது என்ற குருதேஜ்பகதூரின் நற்செய்தி 350 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கலங்கரை விளக்கமாக மிளிர்கிறது.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி