குரான் ஓதிய இடத்தை இழந்து விட்டோம் அசாதுதீன் ஓவைசி சர்ச்சை பேச்சு!

‘இளைஞர்களே, கடந்த 500 ஆண்டுகளாக, நாம் குரான் ஓதிய இடத்தை தற்போது இழந்து விட்டோம். அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் போது, உங்கள் இதயங்களில் வலி இல்லையா?” என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா, வரும் 22ல் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், ஹைதராபாதில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், எம்.பி., அசாதுதீன் ஓவைசி பேசியதாவது:

இளைஞர்களே, கடந்த 500 ஆண்டுகளாக, குரான் ஓதிய இடத்தை நாம் இழந்து விட்டோம். அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் போது, உங்கள் இதயங்களில் வலி இல்லையா? டில்லி சன்ஹேரி மசூதி உட்பட நான்கு மசூதிகள் தொடர்பாக நடக்கும் சதி வேலைகளை நீங்கள் பார்க்கவில்லையா?

பல ஆண்டு கடின உழைப்புக்கு பின், நாம் இந்த நிலையை அடைந்துள்ளோம். இது போன்ற விவகாரங்களில், இளைஞர்களாகிய நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம் இளைஞர்கள் விழிப்புடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். உங்கள் மசூதிகளை அதிக மக்கள் தொகையுடன் வைத்திருங்கள். இந்த மசூதிகள், நம்மிடமிருந்து பறிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார். ஓவைசியின் இந்த பேச்சுக்கு பதிலளித்த பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் அமித் மாள்வியா, ”ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை, அசாதுதீன் ஓவைசி சிறப்பாக வகுப்புவாதமாக்குகிறார்,” என்றார்.