இந்திய சுதந்திரக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக கிருஷ்ணா ஜென்மாஷ்டமி ஒரு துள்ளலோடு கொண்டாடப்படுகிறதோ என்கிற அளவுக்கு பாரதம் முழுவதுமே கண்ணன் பிறந்த தினத்தின் முந்தைய நாட்கள் மிகுந்த பக்தி பரவசத்தோடும் மகிழ்ச்சித் துள்ளள்களோடும் இந்த ஆண்டு நம்மைப் பிரமிக்க வைத்துள்ளது. கோவிட் தாக்கம் குறைந்துள்ளதால் கடந்த இரு ஆண்டுகள் செய்ய மறந்த பல பக்தி விஷயங்கள் இந்த ஆண்டு ஜென்மஷ்டமி கொண்டாட்டங்களில் இடம் பெறுவது உறுதி.
கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாட இன்று நாம் தயாராவோம். மகாவிஷ்ணு எடுத்த 9வது அவதாரம் கிருஷ்ணாவதாரமாகும். கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7. ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள். கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ‘ராசலீலா’ என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.
கிருஷ்ண அவதாரத்தின் போது அவரின் லீலைகள் மக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும்படி இருந்தது. அதே சமயம் மக்களுக்கே தெரியாமல், அவரின் லீலைகள் மூலம் அரக்கர்களை அழித்தல், சமுதாயத்தைக் காத்தல் என பல விஷயங்களை செய்தார் கிருஷ்ணர். பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
மகாபாரத போரின் போது, அர்ஜுனனிடம் தர்மங்களை உணர்த்திய தருணத்தை, நாம் இன்றும் ஹிந்து சமயத்தின் புனித நூலாக ‘பகவத்கீதை’ என்ற பெயரில் படித்து வருகிறோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார். மேல்நாடுகள் பலவற்றில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பலவற்றில் அவர்களின் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகவே பகவத்கீதை சேர்க்கப்பட்டுள்ளது. நமது பக்தி சேர்ந்த வாழ்க்கைக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். அதில் கூறப்பட்டுள்ள கர்மயோகம், பக்தி யோகம், ஞான யோகம் இவற்றின் சாறுபிழிந்து விவேகானந்தர் முதல் பல மகான்கள் இன்றளவும் மக்களுக்கு ஊட்டி வருகிறார்கள்.
ஆர். கிருஷ்ணமுர்த்தி