தமிழகத்தில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கித் திட்டத்தின் கீழ் காடுவளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வனக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை நல்லமுறையில் இயங்க வழிகாட்டுதலும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பல்லுயிர் பசுமை ஆக்கல் திட்டத்தின் கீழ் தனியார் நிலங்களில் வனத்துறை வாயிலாக மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடவுசெய்து கொடுக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நல்ல முறையில் இந்த கன்றுகளை பராமரித்து வளர்க்கும் நில உரிமையாளர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக கிராமப்புறங்களில் பல்வேறு அரிய மூலிகைகளை வளர்க்கும் திட்டத்தை தமிழக வனத்துறை செயல்படுத்த முற்பட்டுள்ளது. இதன் பொருட்டு வனத்துறையே நாற்றங்கால் அமைத்து சங்கு புஷ்பம், ஆடாதொடை, செம்பருத்தி, திருக்கள்ளி, காட்டு இஞ்சி, சீரக துளசி, திருக்குறிஞ்சான், நெல்லி, சிற்றரத்தை, மதுரக்கொல்லி, தூதுவளை, முடக்கத்தான் உள்ளிட்ட மூலிகைகளை உற்பத்தி செய்து அளித்து வருகிறது.
கிராமங்களில் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக இந்த அரிய மூலிகைகளை விவசாயிகளின் தோட்டத்தில் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மருந்துகள் தயாரிக்க இந்த மூலிகைகளை உள்ளீடுகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூலிகைத் தாவரங்கள் வாயிலாகக் கிடைக்கும் வருவாயின் குறிப்பிட்ட பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பகிர்ந்தளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஏட்டளவில் மட்டும் சிறப்பானதாக இருந்தால் போதாது. இதை நடைமுறையிலும் செம்மையான முறையில் அமலாக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் வேண்டுகோள். மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் பெண்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த மூலிகைத் தோட்டம் உதவும் என்பது திண்ணம்.
இந்த மூலிகைகளை மதிப்பேற்ற பொருட்களாக உயர்த்தி சந்தைப்படுத்தினால் பெண்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு கிராமத்தில் மட்டும் கிடைக்கும் மூலிகைப் பொருட்களைக் கொண்டு மதிப்பேற்ற பொருள் உற்பத்தி மையத்தை நடத்துவது பொருளாதார ரீதியாக சாத்தியம் அல்ல என்று கூறப்படுகிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு இணங்க பல்வேறு கிராமங்களையும் ஒருங்கிணைத்து மதிப்பேற்ற பொருள் உற்பத்தி மையத்தை லாபகரமாக நடத்துவது சாத்தியம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இத்திட்டத்தை உடனடியாக ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தலாம். இதில் காணப்படும் ஏற்ற இறக்கங்களை நன்கு பரிசீலித்து, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றையெல்லாம் களைந்துவிட்டு, திட்டத்தை செம்மையான முறையில் மற்ற மாவட்டங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தலாம்.