காஷ்மீர் பண்டிட்டுகள் போராட்டம்

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ‘வீட்டில் அமர்ந்திருக்கும், வேலை செய்யாத ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கப்படாது’ என்று கூறியதை அடுத்து, காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்த ஊழியர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், தங்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், மீண்டும் பணிக்கு செல்ல முடியாது என்றும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர், “மே 27 அன்று, காஷ்மீர் பண்டிட் ஊழியர்களின் பிரதிநிதிகள் குழு மாநில அரசாங்கத்துடன் ஒரு சந்திப்பை நடத்தியது. அப்போது அவர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் மே 29 அன்றே ஒரு கொலை நடந்தது. எங்களுக்கு மீண்டும் மீண்டும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. சமீபத்தில் நாங்கள் பணிக்கு அனுப்பப்படும் இடத்திற்கு வெளியே ஒரு காவலர் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தின் பாதுகாப்புக் கொள்கையை நாங்கள் நம்பவில்லை. காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலே போராட்டங்களுக்கு முக்கியக் காரணம். பள்ளத்தாக்கில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் தொடங்கிய நாளிலிருந்து நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கூறினார்.