பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, ஜூன் 23 அன்று டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் கூட்டத்தில் பேசும் போது, காஷ்மீர் விவகாரத்தில் நாட்டின் முதல் பிரதமர் நேரு வரலாற்றுத் தவறு செய்து விட்டார் என தெரிவித்தார். இந்த கருத்துக்கு பதில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஜெய்பால் ரெட்டி உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையை, ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வதற்கு முன் மந்திரி சபையில் ஆலோசனை நடத்திய பின்னர் தான் கொண்டு செல்லப்பட்டது என கூறும் ஜெய்பால் ரெட்டி அமைச்சரவை கூட்டத்தில் என்ன நடந்தது என்று கூறவில்லை. அன்றைய ஊடகங்கள் முழுமையான செய்திகளை வெளியிடுவதில்லை. ஜெய்பால் ரெட்டி விடுத்த அறிக்கையில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி எதிர்ப்பு அப்போதைய ஊடகங்களில் எந்தச் செய்தியும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சம்பவம் நடைபெற்ற ஆண்டு 1947 செப்டம்பர் மாதம்; அன்று முழுமையான மந்திரி சபை உருவாகவில்லை.
ஆனால் உண்மையில் மௌண்ட்பேட்டன் ஆலோசனையின் படிதான் நேரு காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.சபைக்கு எடுத்துச் சென்றார். (ஆதாரம் இந்திய வரலாறு பாகம் 1, ஆசிரியர் ராமச்சந்திர குஹா; பக்கம் 132) இந்த கருத்திற்கு ஆதரவாக, கவர்னர் ஜெனரல் மௌண்ட்பேட்டன் மகள் பமீலா மௌண்ட்பேட்டன் ஒரு நேர்காணலில், காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எனது தந்தையின் நோக்கத்தை, எனது தாயாரின் மூலம் நேருவை சம்மதிக்க வைத்தார்” என தெரிவித்துள்ளார். நேரு மந்திரிசபையில் ஒப்புதல் வாங்கினாரா என்பதை ஜெய்பால் ரெட்டி வகையறா தான் விளக்க வேண்டும்.
இந்தியாவின் ஒரு அங்கம் காஷ்மீர் என்பதை மறந்து விட்டு, 1947 அக்டோபர் 27 முதல் 1959 ஜனவரி 24 வரை நேரு காஷ்மீர் விவகாரத்திற்காக எழுதிய கடிதம், பேசிய பேச்சுகள் எதை காட்டுகின்றன?
இங்கிலாந்து பிரதமர் கிளமென்ட் அட்லிக்கு நேரு 1947 அக்டோபர் 26 அன்று எழுதிய தந்திக் கடிதத்தில், சிக்கலில் உள்ள காஷ்மீருக்கு உதவுவது, இந்தியாவுடன் இணைவதற்கு முயலுவதாக நினைக்க கூடாது. பிரச்சினைக்குரிய எந்த பகுதியானாலும் அல்லது எந்த மாநிலமானாலும், அந்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டோம் என உறுதி கூறுகிறேன். இதில் உறுதியாக இருப்பது என்பது எங்களின் நிலைப்பாடாகும் என தெரிவித்தார். இதே வாசகத்தை பாகிஸ்தான் பிரதமருக்கு 27.10.1947 அன்று அனுப்பி வைத்தார். இது தான் நேருவின் ராஜ தந்திரம்.
அகில இந்திய வானொலியில் பிரதமர் நேரு 1947 நவம்பர் 2 அன்று உரையாற்றும்போது, காஷ்மீரில் முழு அமைதி திரும்பியவுடன், அந்த மக்களின் விருப்பதிற்கு ஏற்ப இணைவது பற்றி முடிவு செய்யப்படும்” என்றார். பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கு கருத்துக் கணிப்பு பற்றி விவரத்திற்கு அனுப்பிய தந்தியில், மிகவும் தெளிவாக குறிப்பிடுகிறேன், எக்காரணத்தை கொண்டும் எங்களின் விருப்பத்தை காஷ்மீர் மீது திணிக்க மாட்டோம், இறுதி முடிவு காஷ்மீர் மக்களே எடுக்க வேண்டும்” என்றார்.
ஐ.நா.சபையின் மீது நம்பிக்கை வைத்து கடிதம் எழுதிய நேரு, ஒரு காலகட்டத்தில் ஐ.நா.சபையை பற்றி கூறும்போது, பழி பாவத்துக்கு அஞ்சாத ஓர் அமைப்பாக ஐ.நா.சபை காணப்படுகிறது. அதை தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரைப் போலவே, வெளிப்படையாக பாகிஸ்தான் சார்பாக நடந்து கொள்கிறார்கள். அறத்துக்கு பதிலாக பலசாலிகளுடைய அரசியல் ஆட்சி செய்கிறது” என்றார். (ஆதாரம் இந்திய வரலாறு பாகம் 1 பக்கம் 134). நேரு செய்த இந்த மிகப் பெரிய தவறு என்பதை காங்கிரஸ் கட்சிக்கு எப்படி உறைக்கும்?
இந்திய அரசியல் சாஸனம் 25.11.1949-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், 26.1.1950-லிருந்து தான் அமலுக்கு வந்தது. ஆனால் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தனது அமைச்சர் பதவியை 6.4.1950-ல் ராஜினாமா செய்தார். தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பே மந்திரி சபைக் கூட்டத்தில் நேருவிற்கும், முகர்ஜிக்கும் ஏற்பட்ட மோதலால், மந்திரி சபைக் கூட்டம் பாதியிலேயே முடித்து வைக்கப்பட்டது என்பதையும் இந்த நேரத்தில் ஜெய்பால் ரெட்டிக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்து விட்டு, நேருவின் காஷ்மீர் கொள்கையை விமர்சனம் செய்யும் விதமாக, நாடாளுமன்றத்தில் 17.2.1953-ல் சுமார் ஐம்பது நிமிட உரையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் போக்கு நாட்டை சீர்குலைத்து விடும் என வாதிட்டார் முகர்ஜி. இந்த உரை மிகவும் முக்கியமான உரை. காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சாஸன பிரிவு 370 தனி அந்தஸ்து வழங்குவதை கண்டித்து தனது உரையில், If the Indian Constitution is good enough for four cores of Muslims of India, it is also good enough for the people of Jammu Kashmir என கேள்வி எழுப்பினார்.