கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் வில்சன், 57. இவர், கடந்த, 8ம் தேதி இரவு, தமிழக – கேரள எல்லையில் உள்ள, சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அங்கு சென்ற இரண்டு பேர், வில்சனை துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொன்றனர்.
இந்த கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளான, கன்னியாகுமரி மாவட்டம், அடப்புவிளையை சேர்ந்த அப்துல் சமீம், 29; நாகர்கோவில் கோட்டார் மாலிக் தினார் நகரை சேர்ந்த தவுபீக், 27, ஆகியோரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். பின், தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இவர்கள் மீது, கொலை, கொலை மிரட்டல் மற்றும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு என்ற, ‘உபா’ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும், கன்னியாகுமரி மாவட்ட போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, பெங்களூரில் பதுங்கி இருந்த, இவர்களின் கூட்டாளிகளான முகமது ஹனீப் கான், 29; இம்ரான் கான், 32; முகமது ஜெயித், 24; இஜாஸ் பாஷா, 46; மெகபூப் பாஷா, 46; உசேன் ஷெரீப், 32, ஆகியோரை, தமிழக, ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு தலைவராக செயல்பட்ட, காஜா மொய்தீன், 47, சையது அலி நவாஸ், 25 ஆகியோரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, மொபைல் போனுக்குரிய, ‘சிம்’ கார்டுகளை வாங்கி கொடுத்தாக, ஆறு பேர், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளிடம் சிக்கி உள்ளனர். இவர்கள் அனைவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன், நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.