காலியாக உள்ள 365 எம்.பி.பி.எஸ்., ‘சீட்’: கவுன்சிலிங் அனுமதி கோருகிறது தமிழகம்

தமிழகத்தில் காலியாக உள்ள, 365 எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மருத்துவ படிப்பு இடங்களுக்கு, கவுன்சிலிங் நடத்த அனுமதி அளிக்குமாறு, மத்திய சுகாதாரத் துறை அமைச்ச ருக்கு தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, மதுரை உள்ளிட்ட, மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், ஆறு எம்.பி.பி.எஸ்., இடங்கள் கடந்தாண்டு வீணாகின. இந்தாண்டும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு, 2023 – 24ம் கல்வியாண்டிற்கான நான்கு சுற்று மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நிறைவடைந்தும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், 86 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் உள்ளன. அதேபோல, 279 பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய மற்றும் மாநில கவுன்சிலிங்கில் நிரம்பாமல் உள்ளன. மொத்தமுள்ள, 365 மருத்துவ இடங்களை நிரப்ப, தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களில் சேர, லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டிப்பதுடன், கவுன்சிலிங் நடத்தவும் அனுமதி தர வேண்டும். அவ்வாறு தந்தால், விலை மதிப்பற்ற இடங்களை நிரப்ப முடியும். எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கு சிறப்பு அமர்வுகள் நடத்தலாம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். இதேபோல, தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

காலி இடங்கள் விபரம்:

கல்லுாரிகள் – எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்.,அரசு மருத்துவ கல்லுாரிகள் – 16 – 24மதுரை எய்ம்ஸ் – 3 – 0நிகர்நிலை பல்கலைகள் – 50 – 51சுயநிதி கல்லுாரிகள் – 17 – 204மொத்தம் – 86 – 279

 

நிரம்பாத 16 இடங்கள்

அரசு மருத்துவ கல்லுாரிகளில், 16 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ளன. அதன்படி, மதுரையில் மூன்று; சென்னை ஸ்டான்லி, ஓமந்துாரார், கோவையில் தலா இரண்டு; கோவை இ.எஸ்.ஐ., கரூர், திருவண்ணாமலை, நாகை, நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர் மருத்துவ கல்லுாரிகளில் தலா ஒரு இடங்கள் காலியாக உள்ளன.