காலி மதுபாட்டிலுக்கு வரி விதிக்கும்படி, வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பார்கள் என அழைக்கப்படும், குடி மையங்களுக்கு உரிமம் பெற்றவர்களின் விபரங்கள், அவர்களின், ‘பான்’ எண் ஆகியவற்றை வழங்கும்படி, டாஸ்மாக் நிறுவனத்துக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும், டாஸ்மாக் நிறுவனம், விபரங்களை வழங்கவில்லை.
இதையடுத்து, விளக்கம் கேட்டு வருமான வரித்துறை, கடந்த மார்ச்சில் நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின், மே மாதம், டாஸ்மாக் நிறுவனத்துக்கு, வருமான வரித்துறை அனுப்பிய உத்தரவில், ‘காலி பாட்டில்களை விற்பனை செய்யும் குடி மையங்களிடம் இருந்து, வருமான வரி பெற்றிருக்க வேண்டும்.
‘காலி பாட்டில் விற்பனையை, ‘ஸ்கிராப்’ ஆக கருத வேண்டும். எனவே, 5 சதவீத வரி செலுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு: உற்பத்தி நடவடிக்கையின் போது ஸ்கிராப் உருவாகும். பாட்டிலை திறப்பதாலோ, உடைப்பதாலோ, கார்க் மூடியை அகற்றுவதாலோ, ஸ்கிராப் ஏற்படும் என்று கூற முடியாது. மேலும், இந்தச் செயல்களை நுகர்வோர் தான் மேற்கொள்வர்.
மது பாட்டிலை விற்பதால், எந்த விரயத்தையும், ஸ்கிராப்பையும், டாஸ்மாக் நிறுவனம் ஏற்படுத்தவில்லை. குடித்து விட்டு, அங்கேயே விட்டு செல்லும் பாட்டில்கள், டாஸ்மாக் நிறுவனத்துக்கு சொந்தம் அல்ல. மதுபான சில்லரை விற்பனை விதிகளின்படி, தின்பண்டங்கள் விற்பனை செய்யவும், விட்டுச் சென்ற காலி பாட்டில்களை அப்புறப்படுத்தவும், குடி மைய உரிமையாளர்களுக்கு உரிமை உள்ளது.
காலி பாட்டில்கள், டாஸ்மாக் நிறுவனம் மற்றும் குடி மைய உரிமையாளர்களின் சொத்து அல்ல. விட்டுச் சென்ற பாட்டில்களை சேகரித்துக் கொள்ள, குடி மைய உரிமையாளர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் நிறுவனம், பாட்டில் உரிமையாளர் அல்ல; ஸ்கிராப் ஏற்படுத்துபவரும் அல்ல. பாட்டிலை திறப்பது, கார்க் மூடியை அகற்றுவது, இயந்திரத்தின் வாயிலாக நடப்பது அல்ல.
அதனால், வருமான வரித்துறையின் உத்தரவில் தகுதி இல்லை. வருமான வரி சட்டம், இதற்கு பொருந்தாது. குடி மைய உரிமையாளர்களின் பான் எண் வழங்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்