காரடையான் நோன்பு

கணவர் சத்தியவானின் ஆயுள் முடிந்து அதனை பறிக்க வந்த எமனுடன் போராடி சத்தியவானை மீட்ட சாவித்திரியின் சரிதம் அனேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். கணவரின் உயிரை மீட்டதுடன் சாவித்திரியின் மாமியார், மாமனாருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைத்தது. எமதர்மனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்த சாவித்திரி, அன்று விரதம், பூஜையுடன் நைவேத்தியம் செய்ய நினைத்தாள்.

வீட்டில் இருந்த கார் அரிசியையும், காராமணியையும் கொண்டு இனிப்பு அடையும் உப்பு அடையும் செய்தாள். கடைந்த வெண்ணெய் உருகாமல் இருந்தது. நுனி வாழை இலையில் அவற்றை வைத்து, ’ஓரடைய நோன்பும், உருக்காத வெண்ணெயும் படைக்கிறேன். ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாமல் இருக்க வேண்டும்’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள். நைவேத்யம் செய்தாள். பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினாள். சாவித்திரியின் இந்த நோன்பை பெண்கள் பலரும் இன்றைக்கும் கடைபிடித்துவருகின்றனர். அதுவே காரடையான் நோன்பு என்று கொண்டாடப்படுகிறது.

சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு. மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இவ்விரதம் கொண்டாடப்படுகிறது. காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்ரி விரதம் என்றெல்லாம் தமிழகத்திலும், சௌபாக்ய கௌரி விரதம் என்று ஆந்திர, கர்நாடக மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது. சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. எந்தப் பெயரில் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான்.

இன்று கார் அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்நாளில் மஞ்சள் பூசிய நோன்புக் கயிற்றை பெண்கள் கட்டிக்கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக் கயிற்றையும் கட்டிக்கொள்வார்கள். ‘மாசிக்கயிறு பாசி படியும்’ என்ற சொலவடைக்கு ஏற்ப, பங்குனி நாளில் இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். படைக்கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. இந்த விரதம் இருந்தால், திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.