காயத்ரி ஜபம்

இன்று காயத்ரி ஜபம். காயத்ரி மந்திரம் என்பது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. `காயத்ரி’ என்பது மந்திரத்தை உச்சரிக்கும் முறைகளில் ஒன்று.  காயத்ரி மந்திரத்தை விஸ்வாமித்திரர் இயற்றியதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. ரிக் வேதத்தில் இருக்கும் மூன்றாவது மண்டலத்தின் ஒரு அருட்பாடல் (3.62.10) காயத்ரி மந்திரம் ஆகும்.

மகாகவி பாரதியார்,பாஞ்சாலி சபதம் 152வது பாடலில் காயத்ரி மந்திரத்தின் பொருளை நமக்கு புரியும்படி பாடியுள்ளார். “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக” என்று பொருள் கூறுகிறார். ஒவ்வொரு தெய்வத்திற்கும் காயத்ரி மந்திரம் உண்டு. பொதுவாக காயத்ரி மந்திரம் என்று சொன்னால் அது: ‘ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்’

உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு மாபெரும் தலைவர் எடுக்கும் பொருளாதாரச் சுணக்கம்,போர், பெரும் தொற்று நோய்ப் பரவல் போன்றவை வெடிக்கும் அளவிற்கு எடுக்கும்  தவறான முடிவினால், ஒட்டுமொத்த மனித குலமும் இன்னல்களை அனுபவிக்க நேரிடுவதை அவ்வப்போது பார்க்கிறோம். எனவே ஒட்டுமொத்த உலக நலத்திற்கு பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம்.

பொதுவாக 7, 9 வயதுப் பிராயம் கொண்ட சிறார்களுக்கு இந்த மந்திரம் உபதேசம் செய்யப்படுகிறது. அப்படியானால் அந்த வயது வடுவிற்கு என்னவிதமான பிரார்த்தனை இருக்க முடியும்? கல்வி, செல்வம், வீரம் இவற்றில் எதைத் தேர்வு செய்வது என முடிவெடுப்பது கடினம். பெற்றோரின் தவறான முடிவினாலும்கூட குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். எனவே, இவை போன்ற அறியாமை மற்றும்  குழப்பமான தருணங்களில் தீர்க்கமான முடிவெடுக்கும் சக்தி கொடு என பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம்.

பிரார்த்தனை செய்வது ஒரு குழந்தை. ஆனால் ‘எங்களுக்கு’ (தீமஹி) எனப் பன்மையில் பிரார்த்தனை மந்திரம் இருப்பதை உற்றுக் கவனித்தால், குடும்ப உறுப்பினர்கள், சமுதாயம், நாடு மற்றும் ஒட்டுமொத்த மனித குலமும் தெளிவாக முடிவெடுக்க பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். சரியான நேரத்தில்  நாம் எடுக்கும் சரியான முடிவுகளே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. சரியான முடிவினைத் தீர்மானிக்க பிரார்த்தனை அவசியம். தனி ஒருவரது வெற்றியும் சாதனையும் பெரிதல்ல. உலக நலனை வலியுறுத்துவதே நம் தேசத்தின் கலாசாரம், பண்பாடு. அனைத்து ஜீவராசிகளின் நலத்திற்கான பிரார்த்தனை இது. சனாதன தர்மத்தின் அடித்தளமும் இதுவே. தினமுமே காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். ஆனால், காயத்ரி ஜப தினம் என்று சிறப்பாகச் சொல்லப்படும் இந்நாளில் 1,008 முறை காயத்ரி மந்திர ஜபம் செய்வது சிறப்பு.

ஆர். கிருஷ்ணமூர்த்தி