”காங்கிரஸ்காரர்கள் நெருக்கடி நிலையை அறிவித்ததன் மூலம் தாங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்பதை உலகிற்கு பறைச்சாற்றினார்கள். ஜனநாயகத்தின் ஒவ்வொரு தூணையும் உடைத்தவர்கள் அவர்கள்” என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இந்திரா காந்தி 1971-ல் பாகிஸ்தான் யுத்தத்தில் பாரத ராணுவம் பெற்ற வெற்றிக்கு – பங்களாதேஷ் உருவானதற்கும் – சொந்தம் கொண்டாடி பெற்ற புகழினால், பெரும் ஆதரவுடன் பிரதமரானார். சில நாட்களிலேயே அவருடைய எதேச்சாதிகார போக்குபட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. 1969 லேயே  காங்கிரஸை இரண்டாக உடைத்து மூத்தவர்களை வெளியேற்றி துதிபாடிகளை கொண்டு கட்சியை முற்றிலும் தன்வசம் ஆக்கி வைத்திருந்தார்.

விலைவாசி ஏற்றம், பிஹார்-, குஜராத் போன்ற  மாநிலங்களின் காங்கிரஸ் அரசுகளின் மீது எழுந்த ஊழல் புகார்கள், அதனால் ஏற்பட்ட மாணவர் போராட்டங்கள், ஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையில் நடந்த ரயில்வே ஊழியர்கள் போராட்டம் போன்றவை இந்திராவிற்கு மிகப்பெரும் சவால் ஆகின. மக்கள் போராட்டம் சுதந்திர போராட்ட வீரர் ஜெய பிரகாஷ் நாராயணன் (ஜெ.பி), ஆச்சார்ய கிருபளானி, ஜன சங்கத்தின் மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக் ஆகியோர் வழிகாட்டுதலினால் மேலும் தீவிரமடைந்தது.

மாணவர்கள் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று ஜெ.பி வலியுறுத்தினார். ஆனாலும், காவல்துறை மாணவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்தது. 1975 மார்ச் 18 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 27 மாணவர்கள் உயிர் இழந்தனர்.

1976  மே 7-ம் தேதி இரு சபைகளிலும் மிசா சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி தேச விரோதி என்று ஒருவர் கருதப்பட்டால் அவர் எவ்வித விசாரணையுமின்றி இரண்டு ஆண்டு காலம் சிறை வைக்கப்படலாம்.

இந்த நிலையில்தான், ஜூன் 12-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சின்ஹா, 1971-ல் இந்திரா ராய்பரெலி தொகுதியில் பெற்ற வெற்றி சட்டப்படி செல்லாது  என்று தீர்ப்பு அளித்தார். அரண்டு போனார் இந்திரா. கட்சியின் இளைய தலைவர்களை கொண்டு  நீதிமன்றங்களை விமர்சிக்க வைத்தார். தன் ஆட்சிக்கு ஆதரவாக கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்த வைத்தார். உச்சநீதிமன்றத்திற்கு அப்பீலுக்கு போனார். ஜூன் 24, நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் அளித்த நிபந்தனையுடன் கூடிய தீர்ப்பால் கிடைத்த அவகாசத்தை துஷ்பிரயோகம் செய்து ஜூன் 25 நள்ளிரவில் தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்ள நெருக்கடி நிலையை அறிவித்தார்.

மறுநாள்தான் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி பக்ருத்தீன் அலி அகமது கையெழுத்து பெறப்பட்டது. ஆனால் ஜூன் 25 நள்ளிரவில் இருந்தே எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கைதுப் படலம் தொடங்கிவிட்டிருந்தது. 1947-ல் நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் அதே போல ஒரு நள்ளிரவில் பறிபோன அவலக் கதை இதுதான்.

மிசா சட்ட கோர தாண்டவம்

ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் நடந்ததாகக் கேள்விப்பட்ட விஷயங்கள் பாரத நாட்டிலேயே நிகழத் தொடங்கி விட்டன. 1975 ஜூன் 26 அதிகாலை  இரண்டு மணிக்கு ஜெ.பி. கைது செய்து ஜீப்பில் ஏற்றபட்டார். அப்போது, அவர் ”விநாச காலே விபரீத புத்தி” (கேடுகாலத்தில் புத்தி கெட்டுப் போகிறது) என்ற முதுமொழியை சொல்லி சிரித்தார். பங்களூருக்கு நாடாளுமன்றக் கமிட்டியின் சார்பாகச் சென்றிருந்த வாஜ்பாய், அத்வானி, மது தண்டவதே, சியாமா நந்தன் மிஸ்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். பங்களூருக்கு நாடாளுமன்றக் கமிட்டியின் சார்பாகச் சென்றிருந்த வாஜ்பாய், அத்வானி, மது தண்டவதே, சியாமா நந்தன் மிஸ்ரா ஆகியோர் கைது செய்யப்
பட்டார்கள்.

ஆர். எஸ். எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டதால் தமிழகத்தில் தியாகபூமி போல் பல மாநில மொழிகளிலும் வெளிவந்து கொண்டிருந்த தேசிய இதழ்களும் முடங்கின. தேசம் முழுவதும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் (தமிழில் தினமணி), தமிழகத்தில் துக்ளக் போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய பத்திரிகைகள் தவிர ஏனையவை எல்லாம் அச்சத்தின் காரணமாய்  தங்களுக்குத் தாங்களே வாய்ப் பூட்டு போட்டுக் கொண்டன! இன்றைக்கு, திமுக தர்பாரிடம்  பிரபல ஊடகங்கள்  எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படி என்று புரிந்துகொள்ளலாம்! இதைத்தான், தொண்டர்கள் என்பதை பின்னாளில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சரான அத்வானி, “பத்திரிகைகள் நில் என்றால் குனிந்தார்கள், குனியுங்கள் என்றால் நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்தே விட்டார்கள் ” என்று குறிப்பிட்டார்.

இருண்ட வானில் ஒளிக்கீற்று ஆர்.எஸ்.எஸ்

இப்படியாக என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் கலங்கிப் போயிருந்தனர், அச்சத்தால் சாதாரண மனிதர்கள் நிலை அவ்வாறு என்றால், அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் அதனை நியாயப் படுத்தவும் செய்தனர். ஏதாவது வகையில் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று நினைத்தவர்கள் கூட கையறு நிலையில் இருந்தனர். அப்படிப்பட்ட வேளையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நிதானம் தவறாமல் உடனடியாகக்  களத்தில் இறங்கியது.  ஜூன் 27 அன்றைய அகில பாரத தலைவர் பாளாசாகேப் தேவரஸ் கைது செய்யப்பட்டு விட்டார். நடக்கும் போக்குகளைக் கொண்டு முன்னரே யூகித்திருந்த அடுத்த கட்டத் தலைவர்கள் தலைமறைவாகி எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லத் துவங்கினர். அவர்களுள், மாதவராவ் முளே, மோரே பந்த் பிங்களே, பாவுராவ் தேவரஸ் என்ற மூவரும் குறிப்பிடத்தக்கவர்கள். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது தான் லோக சங்கர்ஷ் சமிதி என்றழைக்கப் பட்ட மக்கள் போராட்டக் குழு. ஓரிரு மாதங்களில் நாடு முழுவதும் தகவல் தொடர்பு ஏற்பாடு பூரணமாகச் செய்யப்பட்டு விட்டது. தமிழில் எரிமலை, போராட்டம், வஜ்ராயுதம் போன்று, அந்தந்த மாநில மொழிகளில்  ரகசியப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு விநியோகமாயின.

நம் நாட்டில் மட்டுமில்லாது அயல்நாடுகளில் வாழும் பாரதியர்களும் தங்கள் எதிர்ப்பைக்காட்ட சிறு சிறு குழுக்களாக இணைந்து செயல்பட்டார்கள். பின்னர் அது பிரெண்ட்ஸ் ஆப் இந்தியா என்று வலுவான அமைப்பாக மாறியது.

எதிர்ப்பை முழுவதும் அறவழியில் நடத்தியது சங்கம். அதாவது சத்தியாக்
கிரகம், உண்ணாவிரதம், அரங்க கூட்டங்கள், பொது வெளியில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் தொடர்ந்து நடந்தன. பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை புகுந்தார்கள். தமிழகத்தில் மிசாக் கைதிகளாக அடைக்கப்பட்டவர்களுள் சிலர்: வீ ரங்கசாமித் தேவர் (ஆர்.எஸ்.எஸ் மாநில தலைவர்), சமீபத்தில் காலமான ப. வேயாயுதம், இன்றைய சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி,  ம வீரபாகு (விஜயபாரதம் முன்னாள் ஆசிரியர்).

தேசம் கற்ற பாடங்கள்

நெருக்கடி நிலைக் காலத்தில் பொதுமக்கள் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். சாதாரணமாய் தாங்கள் ஆட்சியில் இருப்பதால் தங்களுக்குத் தாங்களே மாவீரர்கள், அஞ்சா நெஞ்சர்கள், சிங்கங்கள் என்று பட்டம் சூட்டிக் கொண்டவர்கள்  எல்லாம் மிசாவிற்கு அஞ்சி பூனைகளானார்கள். பேரணி, ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டால் மட்டும் போதாது கட்சியின் அடிப்படைத் தொண்டர்களுடன் ஆன தொடர்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பது கட்சித் தலைவர்களுக்கான பாடம்.

சாமானியர்களான நாம் நாட்டின் நடப்புகளைக் கூர்ந்து கவனித்து, ஆக்க சக்திகளை  ஆதரிக்கவும், தேச விரோத நபர்கள் – இயக்கங்களுக்கு எதிர்ப்பைப் பதிவிட்டு இயன்ற வகையில் எல்லாம்   நாட்டுப் பற்றைச் செயலில் காட்ட வேண்டும். நிரந்தர விழிப்புணர்வே தேசத்தின் சுதந்திரத்திற்கு நாம் கொடுக்கும் விலை. இதை எந்த நாளும் நினைவில் கொள்வோம்.

கட்டுரையாளர் : பத்திரிகையாளர்