காங்கிரஸ் அரசுக்கு வெட்கமே இல்லை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

”கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு வெட்கமே இல்லை,” என, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், குற்றஞ்சாட்டினார்.

மாநிலத்துக்குரிய வரி பங்கை, மத்திய அரசு சரியாக வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டி, கர்நாடக காங்கிரஸ் அரசு புதுடில்லியில் நேற்று போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கூறியதாவது: வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்தி, வரி செலுத்துவோருக்கே காங்கிரஸ் பொய் சொல்கிறது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு வெட்கமே இல்லை. வரி செலுத்துவோரின் பணத்துடன் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை விளம்பரப்படுத்துகின்றன.

அப்பட்டமான பொய்களை கூறி கர்நாடக அரசு வறட்டு கவுரவத்தை காட்டுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தை விட, தற்போது 159 சதவீதம் கூடுதல் நிதியை கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் கர்நாடக அரசுக்கு, 62,098 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதி ஆணையத்தின் நிபுணர் குழு, தனியாக பரிசீலனை செய்து, எவ்வளவு வரி நிதியை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், கர்நாடகாவுக்கு 74,376 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டு மடங்கு தொகையை கொடுத்துள்ளது. அதாவது, 2021 – 22 முதல் 2025 – 26 வரையிலான காலக்கட்டத்தில் 1,92,514 கோடி வரி ஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவுக்கு 2021ல் 4,659 கோடி ரூபாயும்; 2022 மற்றும் 2025 – 26 வரையிலான 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 4,659.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 – 22 முதல் 2023 – 24 வரை, நரேந்திர மோடி அரசு, மத்திய அரசு பங்காக 1,681.60 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தேசிய இயற்கை பேரிடர் மீட்பு நிதியாக 2,563.13 கோடி ரூபாய் கர்நாடகாவிற்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பத்ரா மேலணை திட்டத்தை, 2023 பிப்ரவரியில், தேசிய திட்டமாக மத்திய அரசு அறிவித்து, 5,300 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், கர்நாடக காங்கிரஸ் அரசு, கடந்தாண்டு ஜூலையில் தாக்கல் செய்த 2023 – 24 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு பூஜ்ய மானியத்தை ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.