கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே சென்னை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியும், இன்னும் கனமழை பெய்தால் தண்ணீர் தேங்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.
சென்னை நகரில் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழை பெய்யும்போதும், நகரின் பரவலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த துயரத்தை போக்க வடிகால் அமைக்கும் பணிக்காக முதல்வர் ஸ்டாலின் 4000 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை துவக்கியது அனைவரும் அறிந்ததே.
ஆனால், 2010ம் ஆண்டில் இருந்தே வடிகால் அமைப்பதற்காக கோடிகளில் பணம் ஒதுக்கி வந்தும் இன்னும் துயர் குறைந்தபாடில்லை. கடந்த 2010ம் ஆண்டு மே 29ம் தேதி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, சென்னை நகரில், 633 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் அமைத்தல், சீரமைத்தல் திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். அந்த பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், அடுத்துவந்த அதிமுக ஆட்சியிலும் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கி, அவ்வபோது ரோடுகள் தோண்டப்பட்டு, கான்கிரீட்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும், கனமழை பெய்தால் நீர் தேங்கும் நிலைக்கு மட்டும் விடிவுகாலம் பிறக்கவில்லை. கருணாநிதியின் மகன் ஸ்டாலின் முதல்வரானதும் 4000 கோடி ஒதுக்கி பணிகளை துவக்கினார். நகரம் முழுவதும் தோண்டப்பட்டு கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இனி மழை பெய்தால் தண்ணீர் தேங்காது என ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு கூறியும் வந்தனர். ஆனால் ‘மிக்ஜாம் புயல்’ இந்த அரசியல்வாதிகளின் முகமூடியை கிழித்து விட்டன.
பல இடங்களில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. மக்கள் பெரிதும் அவதியுற்றனர். மழைநீர் எங்கும் தேங்காமல் வெளியேற்ற ஒதுக்கப்பட்ட 4000 கோடி ரூபாய் என்னாச்சு என அதிமுக.,வினரும், பா.ஜ.,வினரும் கேள்வி கேட்டு வறுத்தெடுக்கின்றனர். சமூக வலைதளங்களில் கருணாநிதி வடிகால் அமைக்கும் திட்டத்தை துவக்கி வைத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பலரும் திமுக.,வை கிண்டலடித்து வருகின்றனர்.